×

சீன உறவில் சிக்கல்: வெளியுறவுத்துறை அறிக்கை

புதுடெல்லி: சீனா உடனான உறவு சிக்கலில் இருப்பதாக ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்தின் ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்தின் ஆண்டறிக்கை 2022 நேற்று வெளியிடப்பட்டது. இதில் கூறப்பட்டுள்ளதாவது: சீனாவுடனான இந்தியாவின் உறவு சிக்கலில் உள்ளது. கடந்த 2020 மே மாதம் முதல் சீன பலமுறை எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் மேற்கு பகுதியை தன்னிச்சையாக மாற்ற முனைந்தது. இதனால் அப்பகுதியில் அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டது. கிழக்கு லடாக் எல்லை பிரச்னைக்கு அமைதியான முறையில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண இந்தியா முயன்றது.இதனால் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இரு நாடுகளும் படைகளை விலக்கி கொண்டன.

கடந்த 2021 பிப்ரவரியில் பாங்காங் சோ, ஆகஸ்ட்டில் கோக்ரா, 2022ம் ஆண்டு செப்டம்பரில் கோக்ரா-ஹாட் ஸ்பிரிங் எல்லை நிலைப் பகுதிகளில் படைகள் திரும்ப பெறப்பட்டன. மேலும் பாகிஸ்தானின் ஆதரவுடன் நடக்கும் எல்லை தாண்டிய தீவிரவாதம் இன்னும் குறையவில்லை என்று ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தான் தனது உள்நாட்டு அரசியல் மற்றும் பொருளாதார தோல்விகளை திசை திருப்புவதற்கு இந்தியாவை மோசமாக சித்தரிக்கும் வகையில் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. மும்பை தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான அப்பாவி குடும்பத்தினருக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கையையும் பாகிஸ்தான் இன்னும் மேற்கொள்ளவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : China , Troubled China Relations: State Department Report
× RELATED சீனாவில் பிரம்மாண்ட கார்...