அடுத்தடுத்து 2 வங்கிகள் திவால் அமெரிக்காவில் மக்கள் பதற்றம்: பீதி அடைய வேண்டாம்: அதிபர் பைடன்

நியூயார்க்: அமெரிக்காவில் அடுத்தடுத்து 2 வங்கிகள் திவால் அடைந்துள்ளதால் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பீதி அடைய வேண்டாம் என்று அதிபர் பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவில் சிலிகான் வங்கி நஷ்டமானதால் திவால் ஆனது. இதையடுத்து அதில் முதலீடு செய்தவர்கள் பணத்தை எடுக்க தொடங்கினர். இதனால் பங்குச்சந்தை ஆட்டம் கண்டது.  பங்குச்சந்தையில் இருந்த முதலீட்டை எடுத்து தங்கத்தை முதலீட்டாளர்கள் வாங்க தொடங்கியதால் தங்கம் விலை கிடு கிடு என உயரத் தொடங்கியது.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் வங்கியை அடுத்து தற்போது மேலும் ஒரு வங்கி திவால் ஆகி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலிக்கான் வங்கியை அடுத்து தற்போது சிக்னேச்சர் வாங்கி திவால் ஆகி மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சிலிக்கான் வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டு இரண்டு நாள் கூட முடிவடையாத நிலையில் திடீரென இன்னொரு பெரிய வங்கியான சிக்னேச்சர் வங்கியும் திவால் ஆனதால் அதில் டெபாசிட் செய்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அமெரிக்க பெடரல் வங்கி இந்த வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களின் பணம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. சிலிக்கான் வங்கியை போலவே சிக்னேச்சர் வங்கியையும் அமெரிக்க அரசின் பெடரல் டெபாசிட் அமைப்பு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இதனை அடுத்து வாடிக்கையாளர்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகை கொடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிலிகான் வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கி திவால் ஆகி உள்ள நிலையில் அமெரிக்க பொருளாதாரத்தை வலிமைப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

ஆனாலும் மக்கள் மத்தியில் பீதி அடங்காததால் அதிபர் பைடன் நேற்று நிதிநிலைமை குறித்து மக்களிடம் விளக்கினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:  அடுத்தடுத்து 2 வங்கிகள் திவால் ஆனதால் பீதி அடைய வேண்டாம். நமது நாட்டின் நிதிநிலைமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும். உங்கள் வைப்புத்தொகை உங்களுக்குத் தேவைப்படும்போது வழங்கப்படும். இந்த பிரச்னைக்கு பொறுப்பானவர்களை பொறுப்பேற்க நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் வரி செலுத்துவோருக்கு எந்த இழப்பும் ஏற்படாது. வங்கிகளில் என்ன நடந்தது என்பதற்கான முழு கணக்கையும் நாங்கள் பெறுவோம். வங்கி அமைப்பு பாதுகாப்பானது என்று அமெரிக்கர்கள் நம்பலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: