சென்னை: வருகிற 20ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. இது தொடர்பாக உயர் மட்ட அதிகாரிகள் அளவில் பலமுறை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பொருளாதார ஆலோசனை குழுவுடனும் கலந்து பேசினார். அந்த அடிப்படையில்தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மாதம் சட்டசபையில் தாக்கலாகும் பட்ஜெட்டில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று அறிவித்தார். இதையடுத்து இந்த திட்டத்தில் யார் யாருக்கு மாதம் ரூ.1000 கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகளை அரசு நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. மகளிர் மேம்பாட்டு கழகம், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ் உள்ள ஏஜென்சியால் தமிழகத்தில் வறுமை கோட்டில் ஏழைகள் எவ்வளவு பேர் உள்ளனர் என்று ஒரு சர்வே எடுக்கப்பட்டு வருகிறது. அதில் சொந்த வீடு இல்லாத அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்படும் குடும்ப தலைவிகள் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. நிலையான மாத வருமானம் இல்லாமல் அன்றாட கூலி வேலை செய்யும் உழைக்கும் பெண்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்றும் கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது. கணவனால் கைவிடப்பட்டவர்கள் பட்டியலும் இதில் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு ரூ.1000 வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பி.எச்.எச். என்ற வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ரேசன் அட்டைதாரர்களுக்கும், பி.எச்.எச்., ஏ.ஏ.ஒய். என்ற அந்த்யோதயா அன்ன யோஜனா ரேசன் அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கும் ரூ.1000 கிடைக்கும்.
ஆனாலும் இதில் கணவரின் ஆண்டு வருமானம் கணக்கில் எடுக்கப்பட உள்ளது. இந்த பட்டியல் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. மகளிர் மேம்பாட்டு கழகம் தகுதியானவர்களின் பட்டியலை ஆய்வு செய்து வருகிறது. வருகிற 20ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக பட்ஜெட்டில் பெண்களுக்கான உரிமைத்தொகை அறிவிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை இந்த பட்ஜெட்டில் அறிவிக்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் அனைத்தும் வேகப்படுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் மாதம் அதிக வருமானம் பெறும் குடும்பத்துக்கு இந்த தொகை கிடைக்காது. தமிழ்நாட்டில் தற்போது 1.14 கோடி ரேஷன் கார்டுகள் ஏழைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் வரை 34.27 லட்சம் பேர் 9 பிரிவுகளின் கீழ் ரூ.1000 ஓய்வூதியம் பெற்றுள்ளனர். பெரும்பாலான ஏ.ஏ.ஒய். கார்டுதாரர்களும் ஏற்கனவே முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்துள்ளனர். எனவே இவை அனைத்தையும் ஒப்பிட்டு தகுதியான குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை ரூ.1000 கிடைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேர தகுதியான பயனாளிகளை வருவாய்த்துறையும், மகளிர் மேம்பாட்டுக்கழகமும் ஆய்வு செய்து வருகிறது. விரைவில் முதல்வர் பார்வைக்கு கொண்டு சென்று இதை இறுதி செய்வோம் என்றார்.
