ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக வியூகம் எதிர்கட்சி தலைவர்களுடன் மம்தா ஆலோசனை: நாளை டெல்லி பயணம்

கொல்கத்தா: ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக எதிர்கட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மம்தா பானர்ஜி நாளை டெல்லி செல்கிறார். அடுத்தாண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்துவதற்காக, எதிர்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. அந்த வகையில் மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, எதிர்கட்சி தலைவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கிய நிலையில், எதிர்கட்சி தலைவர்களின் சந்திப்பு நாளை டெல்லியில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாளை டெல்லி செல்ல உள்ளார். இதுகுறித்து  திரிணாமுல் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், ‘லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக எதிர்கட்சி தலைவர்களை ஒருங்கிணைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மம்தா கலந்து கொள்கிறார். எதிர்க்கட்சிகளை பயமுறுத்துவதற்காக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயை பயன்படுத்தி வரும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக பொதுவான செயல்திட்டங்களை வகுப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி இல்லாத மாநில தலைவர்கள், முதல்வர்கள் கலந்து கொள்வார்கள்’ என்றார்.

Related Stories: