×

திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு தொடங்கியது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 158 பள்ளிகள் உள்ளன. இங்கு, நாளை தொடங்கும் பிளஸ் 1 பொதுத்தேர்வை மாணவர்கள் 14400 பேர், மாணவிகள் 16491 பேர் என மொத்தம் 30,891 பேர் எழுதுகின்றனர். இன்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வை மாணவர்கள் 15823 பேர், மாணவிகள் 17037 பேர் என மொத்தம் 32,860 பேர் எழுதினர். இதற்காக மொத்தம் 100 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வில் காப்பி அடிக்கும் மாணவர்களை பிடிப்பதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தலைமையில் 109 பேர் கொண்ட 5 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. 1850 பேர் அறைக்கண்காணிப்பாளராக பணியில் உள்ளனர். மேலும் துறை அலுவலர்கள் 116 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இன்று தொடங்கிய பிளஸ் 2 தேர்வை செங்கல்பட்டு, மாம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கலெக்டர் ராகுல்நாத் பார்வையிட்டார்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு இன்று தொடங்கியது.

மொத்தம் மாணவர்கள் 6,903 பேர், மாணவிகள் 7,014 பேர் என மொத்தம் 13,917 பேர் தேர்வு எழுதினர். இதற்காக 7 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு 7 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 14 கூடுதல் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 53 தேர்வு மையங்களுக்கு 53 முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் 2 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர், 53 துறை அலுவலர்கள் மற்றும் 3 கூடுதல் துறை அலுவலர்கள், 12 வழித்தட அலுவலர்கள், 80 பறக்கும் படை அலுவலர்களும், 900 அறை கண்காணிப்பாளர்களும், சொல்வதை எழுதுபவர்களாக 54 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  இன்று காலையில் தேர்வு தொடங்கியதும் மாணவர்கள் ஆர்வத்துடன் எழுதினர். மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் தேர்வு எழுதியதை கலெக்டர் பார்வையிட்டார்.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் 134 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இன்று தொடங்கிய பிளஸ் 2 தேர்வை 20 ஆயிரத்து 790 மாணவர்களும், 22 ஆயிரத்து 68 மாணவிகளும், 171 மாற்றுத்திறனாளி மாணவர்களும் என மொத்தம் 42 ஆயிரத்து 858 மாணவ, மாணவிகள் எழுதினர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் தேர்வு எழுத அரசு அனுமதி வழங்கியுள்ளது. தனித் தேர்வர்களுக்கென 11 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் 1080 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். மேலும் புழல் மத்திய சிறையில் 40 பேர் தேர்வு எழுதவுள்ளனர். திருவள்ளூரில் உள்ள ஆர்.எம். ஜெயின் அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முதன்மை கல்வி அலுவலர் த.ராமன், பள்ளி தலைமை ஆசிரியை செல்வி உள்பட பலர் உடன் இருந்தனர்.. 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. இதில் 173 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.



Tags : Thiruvallur ,Kanchi ,Chengalpattu , Plus 2 examination has started in Thiruvallur, Kanchi, Chengalpattu district
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...