×

மருமகள் மீது ஆசிட் ஊற்றி கொலை செய்ய முயற்சி: அதிமுக பெண் நிர்வாகி கைது

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம்- கடலூர் ரோடு செல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கலிவரதன். இவரது மனைவி ஆண்டாள். விருத்தாசலம் அதிமுக நகர துணை செயலாளராக இருந்து வருகிறார். இவர்களது மகன் முகேஷ்ராஜ். இவரது மனைவி கிருத்திகா (26). இவர்களுக்கு ரிஷிதா(5), ரிஷிகா(1) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முகேஷ்ராஜ் கோவை மாவட்டம் அவிநாசியில் தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கிருத்திகாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரது மாமியார் ஆண்டாள் மருமகளை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு விருத்தாசலத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ஆண்டாள் கலந்து கொண்டார். இரவு 10 மணி அளவில் கூட்டம் முடிந்ததும் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மருமகளுடன் தகராறு ஏற்பட்டது. பின்னர் நள்ளிரவு 12 மணி அளவில் கிருத்திகா வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஆண்டாள் பாத்ரூமிற்கு பயன்படுத்தப்படும் ஆசிட் எடுத்து வந்து கிருத்திகாவின் முகம் மற்றும் இடுப்பு பகுதியில் ஊற்றியுள்ளார். மேலும் கொசு விரட்டி திரவத்தை கிருத்திகாவின் வாயில் ஊற்றி கொலை செய்ய முயற்சித்துள்ளார். கிருத்திகாவின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் விருத்தாசலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் விருத்தாசலம் போலீசார் கிருத்திகாவை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆசிட் ஊற்றியதில் கிருத்திகாவின் முகம், கண்கள், காது, உடல், பிறப்புறுப்பு ஆகிய இடங்களில் பலத்த காயமடைந்த நிலையில் வலது கண் பார்வை இழந்து அறுவை சிகிச்சைக்காக புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் ஆண்டாள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : AIADMK , Attempted murder by pouring acid on daughter-in-law: AIADMK woman activist arrested
× RELATED 2025 டிசம்பருக்குள் அதிமுகவில் நிச்சயம்...