×

நெல்லையப்பர் கோயிலில் 100 ஆண்டுகளுக்குப் பின் சந்தனாதி தைலம் தயாரிப்பு: சுவாமிக்கு சார்த்தி சிறப்பு வழிபாடு

நெல்லை: டவுன் நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோயிலில் 100 ஆண்டுகளுக்குப் பின் சந்தனாதி தைலம் தயார் செய்யப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் முன்னிலையில் சுவாமிக்கு சார்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்பொரு காலத்தில் நெல்லையில் மூங்கில் காடு வழியாக அரண்மனைக்குப் பால் கொண்டு சென்ற ராமகோன் என்பவர் கல் தடுக்கி விழுந்ததால் மன்னருக்குக் கொண்டு சென்ற பால் முழுமையாகக் கொட்டிவிட்டது. அடுத்தடுத்து பல நாள்களில் இது போல நிகழ்ந்ததால் அரண்மனைக் காவலர்களுடன் அந்த இடத்துக்குச் சென்ற மன்னன் கல்லை அகற்ற உத்தரவிட்டார். அதனால் கோடாரி கொண்டு அந்த கல்லை காவலர்கள் வெட்டியபோது நெல்லையப்பர் சுயம்புவாகத் தோன்றி காட்சியளித்தார்.

நெல்லையப்பரின் தலையில் கோடாரியால் ஏற்பட்ட வெட்டுக்காயம் இப்போதும் மூல விக்கிரகத்தில் இருக்கிறது. அந்தக் காயத்தால் பாதிப்பு வந்து விடக்கூடாது என்பதற்காகக் கோயில் வழிபாட்டின்போது சந்தனாதி தைலத்தை நெல்லையப்பரின் மூல விக்கிரகத்திற்குப் பூசி அபிஷேகங்கள் நடத்தப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நித்திய பூஜையில் அபிஷேகத்தின் போது சந்தனாதி தைலம் சாத்துவது நிறுத்தப்பட்டது. அமைச்சர் சேகர்பாபு, கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி ஆய்வு செய்தார். அப்போது 100 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் வளாகத்தில் சந்தனாதி தைலம் தயாரிக்கப்பட்டதும், தற்போது அப்பணி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் தைலம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அமைச்சர் சேகர் பாபு மற்றும் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, கோயிலில் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு சந்தனாதி தைலம் தயாரிக்கும்பணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதி தொடங்கியது. சுவாமி சந்நிதியின் வெளிப்பிராகாரத்தில் சந்தனாதி தைலம் தயாரிப்பதற்கென பிரத்யேகமாக அறை உருவாக்கப்பட்டது. அந்த அறையில் 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட செப்புப் பாத்திரத்தில் 44 வகையான மூலிகைகள் மூலம் சந்தனாதி தைலம் தயார் செய்யும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு மூலிகையையும் நன்றாகக் கொதிக்க வைத்து பின்னர் ஆறியதும் வேறு மூலிகைகளைச் சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து மூலிகை தைலம் தயாரிக்கப்படும் என ஊழியர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த 6ம் தேதி தைலம் தயாரிக்கும் பணி முடிவடைந்தது. இவ்வாறு தயார் செய்யப்பட்ட சந்தனாதி தைலத்தினை நெல்லை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, கோயில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி, நெல்லை மேற்குப் பிரிவு ஆய்வர் தனலட்சுமி, ஆகியோர் முன்னிலையில் அர்ச்சனை செய்யப்பட்டு, உச்சிக்காலத்தில் சுவாமிக்கு சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.



Tags : Samandandhi ,Balm ,Nelleyapar Temple , Preparation of Santanadi Balm after 100 Years at Nellaipar Temple: Special Worship to Swami
× RELATED நெல்லையப்பர் கோவிலில் காணிக்கை...