×

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேருக்கு மார்ச்17 வரை சிறை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேருக்கு வரும் 17ம் தேதி வரை சிறைக்காவல் வைக்க இலங்கை பருத்தித் துறை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே, நேற்று முன்தினம் அதிகாலை நெடுந்தீவு அருகே நாகை மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அவ்வழியாக ரோந்து பணிக்காக வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 2 படகுகளில் இருந்த 16 பேரை கைது செய்தது. மேலும் மீனவர்களிடம் இருந்து 2 விசைப்படகுகளை பறிமுதல் செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை வெவ்வேறு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்திய நிலையில், நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த 12 மீனவர்களை இன்று காலை பருத்தித்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணாந்தன் பொன்னுத்துரை 12 மீனவர்களையும் வரும் 17ம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் மீனவர்களின் படகுகள் அங்குள்ள துறைமுகத்தில் நிறுத்தி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். தற்போது 12 மீனவர்கள் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மீதலுள்ள 4 மீனவர்களுக்கு இன்று மதியம் தீர்ப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Tags : Naga fishermen, March 17, Jail, Sri Lanka court
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...