×

இறவையில் பயிரிட கம்பு ஏற்றது-வேளாண்துறை ஆலோசனை

சிவகாசி : இறவையில் பயிரிட கம்பு ஏற்றது என வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.கம்பு இறவையாகவும், மானாவாரியாகவும் எல்லா வகை நிலங்களிலும் பயிரிட ஏற்றவை. மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 கொண்ட நிலங்கள் சிறந்தவை ஆகும். மானாவாரியில் பயிரிட ஜூலை, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களும், இறவைக்கு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் ஏற்றவை ஆகும். கே.எம்.2, கோ.(சியு).9இ, ஐசிஎம்வி.221 ஏற்ற ரகங்கள் ஆகும். மானாவாரியாக இருந்தால் எக்டேருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். இறவையாக இருந்தால் எக்டேருக்கு 3.75 கிலோ தேவைப்படும்.

வறட்சியை தாங்கி வளர பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் 20 கிராமை 1 லிட்டர் நீர் கலந்து கரைசலில் விதைகளை 6 மணி நேரம் ஊறவைத்து பின்பு நிழலில் உலர்த்தி தன் எடைக்கு உலர்த்திய பின்பு விதைக்க வேண்டும். 1 எக்டேருக்கு 12.5 கிலோ நுண்ணூட்டச் சத்து இட வேண்டும். நிலத்தில் ஈரம் இருக்கும்போது விதைத்த 3வது நாள் அட்ரசின் 1 எக்டேருக்கு 500 கிராம் களைக்கொல்லி மருந்தினை 900 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். அடியுரமாக 50% தழைச்சத்து முழுவதுமாக மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை இட வேண்டும்.

மீதமுள்ள 50% தழைச்சத்து உரத்தை நட்ட 15வது நாள் மற்றும் 30வது நாள் பிரித்து மேலுரமாக இட வேண்டும். விதைத்தவுடன் 4வது நாளும் பின்னர் 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை மற்றும் காலநிலைக்கு தகுந்தவாறு நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த 15 மற்றும் 30ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் பொருளாதார சேதார நிலை அறிந்து வேளாண்துறை அலுவலர் ஆலோசனையின்படி பயிர் பாதுகாப்பு மருந்துகள் உபயோகப்படுத்த வேண்டும். விவசாயிகள் இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு அந்தந்த பகுதி வேளாண் அலுவலரையோ, வேளாண் விரிவாக்க மையத்தையோ அணுகலாம் என வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.



Tags : Rye , Sivakasi: The agriculture department has advised that rye is suitable for cultivation in the fall.
× RELATED திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில்...