கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாய பாடம் ஆக்க மறுப்பு: மக்களவையில் ஒன்றிய அரசு பதில்

டெல்லி: தமிழ்நாட்டில் 30 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுவதில்லை என்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடம் ஆக்கப்படுமா என்ற கேள்விக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் உள்ள 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 15 பள்ளிகளில் மட்டும் தமிழ் பாடம் கற்பிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிலும் 63,809 மாணவர்களில் 6,589 மாணவர்கள் மட்டுமே தமிழ் படிக்கின்றனர். கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் உருவாக்கும் பாடத்திட்டத்தை பின்பற்றுகிறது. நாடு முழுவதும் உள்ள மாணவர்களை கருத்தில் கொண்டு கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்படுவதால் கூடுதல் மொழியாக மட்டுமே மாநில மொழிகள் பயிற்றுவிக்கப்படுகிறது.

15 அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் விருப்பம் தெரிவித்தால் மட்டுமே மாநில மொழிகள் பயிற்றுவிக்கப்படுகிறது. மாணவர்கள் விருப்பம் தெரிவித்ததன் அடிப்படையிலேயே தமிழ்நாட்டில் 15 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான பதில் மூலம் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிலும் 57,220 மாணவர்கள் தமிழ் படிக்காதது அம்பலமாகியுள்ளது. எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் தமிழ் பாடமாக கற்பிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: