×

தோகைமலை பகுதியில் கண்வலி கிழங்கு சாகுபடி: அதிக மகசூல் பெற ஆலோசனை

தோகைமலை : கரூர் மாவட்டம் கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் கண்வலி கிழங்கு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கண்வலி கிழங்கு சாகுபடியில் அதிக மகசூல் பெற்று லாபம் பெறுவது குறித்து முன்னோடி விவசாயிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.கண்வலி கிழங்கு மூலிகை பயிராகும். கரூர், சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பரவலாக பயிர் செய்யப்பட்டு வருகின்றனர். நல்ல மகசூல் மற்றும் லாபத்தை தருவதால் கண்வலி கிழங்கு சாகுபடியில் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஒரு முறை கண்வலி கிழங்கு நடுவதால் இதன் மூலம் சுமார் 3 முதல் 5 ஆண்டுகள் வரை விவசாயிகள் பராமரிக்கலாம்.
கண்வலி கிழங்கு சாகுபடி செய்வதற்கு நல்ல வடிகால் வசதி உள்ள நிலத்தை தயார் செய்ய வேண்டும். இதேபோல் செம்மண், மணல் பாங்கான நிலப்பகுதிகள் கண்வலி கிழங்கு சாகுபடிக்கு ஏற்ற நிலமாகும். கண்வலி கிழங்கு பயிருக்கு முக்கிய ரகங்கள் இல்லை என்பதோடு ஜுன், ஜுலை மாதங்களில் நடவு செய்யலாம். ஒரு ஏக்கரில் கண்வலி கிழங்கு நடவு செய்ய 800 முதல் 900 கிலோ வரை கிழங்குகள் தேவைப்படுகிறது. 60க்கு 30 செ.மீ இடைவெளியில் 5 முதல் 6 செ.மீ ஆழத்தில் கிடை மட்டமாக நடவு செய்ய வேண்டும்.

குறைந்த இடைவெளியில் நடவு செய்வதால் அயல் மகரந்த சேர்க்கை மிக எளிதாக கிடைக்கும். செடிகளின் வளர்ச்சிக்கு ஏற்ற ஓர் அடுக்கு அல்லது 2 அடுக்கு முறையில் நீண்ட வரிசையில் பிரம்பு அல்லது கம்பிகள் கொண்டு பந்தல் அமைக்க வேண்டும். இதனால் அதிகமான பூக்கள் பூப்பதற்கும், எளிதாக அயல் மகரந்த சேர்க்கை செய்வதற்கும் நல்ல வழி கிடைக்கிறது. விவசாயிகள் அதிக ரசாயன உரங்களை குறைந்த கால இடைவெளியில் பயன்படுத்துவதால் மண்ணில் தன்மை மாறுபடுகிறது. இதேபோல் கண்வலி கிழங்குகள் எளிதில் நோய் தொற்று அடைகிறது. ஆகவே அதிகமான மக்கிய தொழு உரம், வேப்பம் புண்ணாக்கு மற்றும் உயிர் உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கண்வலி கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் காலை 8 மணி முதல் 11 மணிக்குள் கைகளால் மகரந்த சேர்க்கை செய்வதன் மூலம் காய்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். விவசாயிகள் மழைகாலங்களில் வடிகால் செய்து நிலத்தில் தண்ணீர் தேங்குவதை தவிர்ப்பதன் மூலம் கிழங்கு அழுகலை தடுக்கலாம்.

கிழங்குகள் முளைக்கும் தருணத்தில் களைக் கொல்லி பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். கண்வலி கிழங்கு அறுவடை முடிந்த பிறகு அடுத்த பருவம் வரை இடைப்பட்ட கலங்களில் தக்காளி, மிளகாய், பாகற்காய் ஆகிய பயிர்களை பயிரிடுவதன் மூலம் கூடுதல் மகசூல் பெறலாம். கண்வலி கிழங்கு நடவு செய்த 100 முதல் 110 வது நாளில் காய்கள் அறுவடைக்கு வரும். காய்கள் வெளிர் பச்சை நிறத்தை அடைந்தவுடன் அறுவடை செய்யலாம்.

ஒரு ஏக்கருக்கு முதல் ஆண்டு 100 முதல் 150 கிலோவும், அடுத்த ஆண்டுகளில் 200 முதல் 225 கிலோ வரை விதைகள் கிடைக்கும். அறுவடை செய்த விதைகளை நன்றாக உலர்த்தி சேமிக்க வேண்டும். இதனால் விதைகளை நீண்ட நாட்களுக்கு சேமிப்பதுடன், பூஞ்சான் தொற்றில் இருந்து பாதுகாக்கலாம். கண்வலி கிழங்கு விவசாயம் என்பது அதிகமான லாபம் தரக்கூடிய பயிராகும்.
இதன் சாகுபடிக்கான முறைகளும் செலவுகளும் சற்று அதிகம் என்றாலும் விவசாயிகள் முறையான வழிமுறைகளை பின்பற்றி சாகுபடி செய்வதன் மூலம் குறைவான செலவில் நல்ல மகசூல் பெற்று அதிகமான லாபம் பெறலாம் என்று முன்னோடி விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

புற்றுநோய் மருந்து தயாரிப்பில் கண்வலி கிழங்கு பயன்பாடு

கண்வலி கிழங்கு மருத்துவ குணம் உள்ளதால் விவசாயிகள் அறுவடை செய்து அனுப்பப்படும் கண்வலி கிழங்குகள் மருத்துவ பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் விதையே முக்கிய மருத்துவப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.கண்வலி கிழங்கு விதைகளில் இருக்கும் கொன்ச்சிசைன் என்கின்ற பொருள் மனிதர்களுக்கு வயிறு, நரம்பு, தோல் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இதேபோல் புற்று நோய்களுக்கான மருந்துகளும் கண்வலி கிழங்கில் இருந்து தயாரிக்க பயன்படுத்துகின்றனர். ஆகவே கண்வலி கிழங்குகள் பெரும்பாலும் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் கடந்த சில வருடங்காளாக கண்வலி கிழங்கு ஏற்றுமதியானது மிகவும் அதிகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

ஒரு கிலோ ரூ.3,000க்கு விற்பனை

கண்வலி கிழங்கு அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கண்வலி கிழங்கானது சுமார் 150 முதல் 200 கிலோ வரை மகசூல் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. இதில் ஒரு ஏக்கருக்கு ரூ.4.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை விவசாயிகள் பெறலாம்.

Tags : Doghaimalai , Thokaimalai: Farmers have shown interest in Kanwali tuber cultivation in Kadavur and Thokaimalai union areas of Karur district.
× RELATED கடவூர் மற்றும் தோகைமலையில் சர்க்கரைவல்லிக்கிழங்கு சாகுபடி துவக்கம்