உடுமலை : அமராவதி அணை நீர்மட்டம் குறைந்ததால், வலையில் அதிக மீன்கள் சிக்கி வருகின்றன. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில், ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிக்கும் பணி மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 17 பரிசல்களில் தலா இருவர் வீதம் அணையில் தினசரி காலை, மாலை நேரங்களில் வலைவிரித்து மீன்பிடித்து வருகின்றனர். இவர்கள் பிடித்துவரும் மீன்களுக்கு கிலோவுக்கு குறிப்பிட்ட தொகை மீன் வளர்ச்சி கழகம் சார்பில் வழங்கப்படுகிறது.
அமராவதி அணையில் கட்லா, ரோகு, மிருகால், ஜிலேபி ஆகிய 4 வகை மீன்கள் கிடைக்கின்றன. இந்த மீன்கள் அமராவதியில் உள்ள மீன் வளர்ச்சி கழக ஸ்டால் மட்டுமின்றி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள மீன் வளர்ச்சி கழக ஸ்டால்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன.அமராவதி டேம் மீன்கள் மிகவும் ருசியாகவும், விலை குறைவாகவும் இருப்பதால், ஏராளமானோர் விரும்பி சாப்பிடுகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று உடுமலை சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் பலர் வந்து டேம் மீன்களை வாங்கி சென்றனர்.வழக்கமாக அணையில் நீர்மட்டம் முழு கொள்ளளவில் இருக்கும்போது, மீன்கள் அதிகம் வலையில் சிக்குவதில்லை. அணையின் அடிப்பாகத்துக்கு சென்றுவிடும். நீர்மட்டம் குறைவாக இருக்கும்போதுதான் அதிகளவு மீன்கள் வலையில் சிக்கும்.
தற்போது அமராவதி அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது. மொத்தமுள்ள 90 அடியில் நேற்று நீர்மட்டம் 52.43 அடியாக இருந்தது. நீர்மட்டம் கிட்டதட்டி பாதியளவு குறைந்துள்ளதால், மீனவர்கள் விரிக்கும் வலையில் அதிகளவு மீன்கள் சிக்குகின்றன.நீர்மட்டம் முழுமையாக இருக்கும்போது, 100 முதல் 150 கிலோ வரைதான் மீன் கிடைக்கும். ஆனால் தற்போது 450 கிலோ வரை மீன் கிடைக்கிறது. இதனால் தங்களுக்கு வருமானம் அதிகரித்துள்ளதால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.