பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் தற்போது பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். பொள்ளாச்சி தாலுகாவிற்கு உட்பட்ட வடக்கு வட்டாரத்தில் வடக்கிபாளையம், புரவிபாளையம், ஜமீன் காளியாபுரம், பெரும்பதி, எஸ்.குமாரபாளையம், ஆதியூர், சென்னியூர், கோவிந்தனூர், மாப்பிள்ளை கவுண்டன்புதூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும். தெற்கு ஒன்றியத்தில் நல்லூத்துக்குளி, ராசிசெட்டிபாளையம், ஜலத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் விவசாயிகள் அதிகளவில் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆண்டுதோறும் பருவமழை மழை பெய்ய துவங்கியதும் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவர். இதில் கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை அடுத்தடுத்து பெய்ததால், பல கிராமங்களில் பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. பல கிராமங்களில் பருத்தி நன்கு விளைந்து வெடித்தவாறு, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. மேலும் சில கிராமங்களில் பருத்தி அறுவடை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பருத்தி சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் கூறுகையில், ‘‘ஆண்டுதோறும் மே மாத இறுதியில் கோடை மழை துவங்கும் சமயத்தில் பருத்தி சாகுபடியை துவங்குவோம். கடந்த ஆண்டில் பருவமழை அடுத்தடுத்து பெய்ததால், பல கிராமங்களில் தென்மேற்கு பருவமழை நிறைவடைந்ததும் அக்டோபர் மாதம் துவக்கத்தில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் இறங்கினர். பொள்ளாசி வடக்கு வட்டாரத்தில் பெரும்பாலும் எல்ஆர்ஏ. ரக பருத்திதான் சாகுபடி செய்யப்படுகிறது. பொதுவாக பருத்தியில் இலைப்புழு தாக்குதல் அதிகமாக இருக்கும். ஆனால் சமீபகாலமாக மாவு பூச்சிகளின் தாக்குதலும் அதிகமாகி வருகிறது.
இதனை சமாளிக்க உரம், பூச்சி மருந்துகள் ஆகியவற்றை உரிய பருவத்தில் செடிகளுக்கு தெளிக்க வேளான்மை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சுமார் 5 மாதத்திற்கு முன்பு சாகுபடி செய்யப்பட்ட பருத்தி, தற்போது பல இடங்களில் பஞ்சு வெடித்த நிலையில் நல்ல விளைச்சலுடன் காணப்படுகிறது’’ என்றனர்.