×

கோவையில் மயக்க ஊசி போட்டு பிடித்து வால்பாறையில் விடுவித்த மக்னா யானை வரகளியாறு பகுதிக்கு இடம்பெயர்ந்தது

*தகவல் பரவியதால் வனத்துறையினர் பரபரப்பு

வால்பாறை :  கோவையில் மயக்க ஊசி போட்டு பிடித்து வால்பாறையில் விடுவிக்கப்பட்ட மக்னா யானை வரகளியாறு பகுதிக்கு இடம்பெயர்ந்ததாக தகவல் பரவி வனத்துறையினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மக்னா யானையை, ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள் வால்பாறை அருகே மானாம்பள்ளி வனச்சரகத்தில் உள்ள கருநீர் பாலம் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி விடுவித்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் அட்டகாசம் செய்து வந்த மக்னா யானையை கும்கி யானை உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர். இதைத்தொடர்ந்து, பிடிபட்ட மக்னா யானையை டாப்சிலிப் வனப்பகுதியில் விடுவித்தனர்.இதையடுத்து மக்னா யானை, கோவை அருகே மதுக்கரை பகுதியில் நகர்வலம் வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் கடந்த மாதம் பிடித்தனர். பின்னர், மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காடு வனப்பகுதியில் விடுவதற்காக கொண்டு சென்றனர். அப்போது அப்பகுதி பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதன் பின்னர், மக்னா யானையை மேட்டுப்பாளையத்தில் இருந்து வால்பாறை அருகே உள்ள மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் விட அதிகாரிகள் முடிவு செய்தனர். தொடர்ந்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து  லாரியில் ஐந்து பேர் கொண்ட மருத்துவ குழுவினருடன் காவல்துறை பாதுகாப்பில் வால்பாறைக்கு மக்னா யானை கொண்டு வரப்பட்டது.
ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரிகள் ஆழியார் வனத்துறை சோதனை சாவடியில் இருந்து பாதுகாப்புடன் மலை வழிச்சாலையில் யானையை வால்பாறைக்கு அழைந்து வந்தனர்.

அட்டகட்டி, வாட்டர் பால்ஸ், கவர்கல், ரொட்டிக்கடை, பழைய வால்பாறை உருளிக்கல் வழியாக மானாம்பள்ளி வனத்திற்குள், கருநீர் பாலம் பகுதியில்  ஏறத்தாழ 20 மணி நேரத்திற்கு பின்னர் யானை விடுவிக்கப்பட்டு, வனத்துறையால் கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பரம்பிக்குளம் அணைப்பகுதியில் தொடர்ந்து வலம் வந்த யானை தற்போது டாப் சிலிப் வரகளியாறு பகுதியில் வலம் வருவதாக வனத்துறை வட்டாரத்தில் தகவல் வேகமாக பரவி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் கோவை வழியாக தர்மபுரி செல்ல வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags : Coimbatore ,Valparai ,Varakaliar , Valparai: Information has spread that the Magna elephant, which was captured in Coimbatore and released in Valparai, has migrated to Varakaliyar area.
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு