×

வல்லம் - ஆலக்குடி சாலை பேய்வாரி வாய்க்காலில் புதிய பாலம் கட்டும் பணி-விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை

வல்லம் : வல்லம் - ஆலக்குடி சாலை பேய்வாரி வாய்க்காலில் புதிய பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் அருகே வல்லம் - ஆலக்குடி சாலையில் உள்ள பேய்வாரி வாய்க்காலில் புதிய பாலம் கட்டும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. வல்லம்- ஆலக்குடி வழியாக தினமும் ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி, பூதலூர் பகுதிகளுக்கு மாணவர்கள், பொதுமக்கள் பைக்குகளில் சென்று வருகின்றனர்.

மேலும் பூதலூர்- வல்லம் வழியாக மருத்துவக்கல்லூரி, தஞ்சாவூர் வரை டவுன் பஸ்சும் இயக்கப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இதன் வழியே சென்று வருகின்றன. மழைக்காலத்தில் பேய்வாரியில் அதிகளவு தண்ணீர் வந்தால் இந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்படும். சாலை தெரியாத அளவிற்கு தண்ணீர் ஓடும். இதை கருத்தில் கொண்டு பழைய பாலத்தை இடித்துவிட்டு அகலப்படுத்தி உயர்மட்ட பாலமாக கட்டும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆமை வேகம் கூட இல்லை. நத்தை வேகத்தில் பணிகள் நடந்து வருகிறது என்று விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.

இந்த பாலம் பணிகள் தொடங்கிய நேரத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட பல பாலப்பணிகள் நடந்து முடிந்து போக்குவரத்து சென்று வருகிறது. ஆலக்குடி, வல்லம் மற்றும் சுற்றுப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி நிலங்கள் உள்ளன. இதற்கு தேவையான உரங்கள், விதைகள், நாற்றுக்கள் என்று பலதரப்பட்ட வாகனங்கள் செல்லும் முக்கிய பாதையாக இந்த வழித்தடம் உள்ளது.

இந்த பாலம் கட்டும் பணியால் வாகனங்கள் சென்று வர தற்காலிக வழிப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் பெய்த கனமழையால் தற்காலிக பாதை சேறும், சகதியுமாக மாறியது. இதனால் விவசாய பணிகள் மேற்கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

ஆலக்குடி, கல்விராயன்பேட்டை உட்பட பகுதிகளிலிருந்து வல்லம், தஞ்சாவூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். மழைக்காலத்தில் தற்காலிக பாதை சேறும், சகதியுமாக மாறுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருசக்கர வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இப்படி தொடர்ந்து பாதிப்பை சந்தித்து வருகின்றனர் இப்பகுதி மக்கள்.

தற்போது சம்பா, தாளடி அறுவடைப்பணிகள் நடந்து நெல் கொள்முதல் பணிகள் நடந்து வருகிறது. கொள்முதல் நிலையத்திலிருந்து லாரிகள் வாயிலாக கொண்டு செல்லப்படுகின்றன. மேலும் அறுவடை இயந்திரங்களும் இந்த தற்காலிக பாதை வழியாகத்தான் சென்று வருகின்றன. இந்த பாதை மண் பாதையாக உள்ளது. இதனால் மிகுந்த இடர்பாடுகளுடன் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் பாலப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் இந்த பாலம் அமைக்கும் பணி மட்டும் மிகவும் மந்தக்கதியில் நடப்பது குறித்து விவசாயிகளும் வேதனை தெரிவிக்கின்றனர்.



Tags : Vallam-Alakkudy Road Beiwari Drainage , Vallam: Farmers demand that construction of a new bridge on Beiwari drain on Vallam-Alakkudi road should be completed soon.
× RELATED கனகம்மாசத்திரம் சாலையில் வேரோடு...