×

பெருங்குளம் வாய்க்காலில் அமலைகள் அகற்றப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு

ஏரல் : பெருங்குளம் குளத்தின் மறுகால் வாய்க்காலில் அமலை செடிகள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் வாய்க்காலில் குளிப்பதற்கு இடையூறு இருப்பதாக கூறி அதனை அகற்றிட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஏரல் அருகேயுள்ள பெருங்குளம் குளம் கடல் போல் விரிந்து காணப்படும் பெரிய அளவிலான குளமாகும். இந்த குளத்தில் உபரி தண்ணீரை வடிய வைப்பதற்காக மறுகால் வாய்க்கால் உள்ளது.

இந்த வாய்க்கால் வழியாக வெளியேற்றப்படும் தண்ணீரானது பெருங்குளம், சின்னநட்டாத்தி, மணலூர், சிறுத்தொண்டநல்லூர் வழியாக சென்று சூழவாய்க்கால் பகுதி வழியாக செல்லும் வைகுண்டம் வடகால் வாய்க்கால் தண்ணீருடன் சேர்ந்து குளத்து பகுதி பாசனத்திற்கு செல்லும். இந்த பெருங்குளம் மறுகால் வாய்க்காலில் பெருங்குளம், சின்னநட்டாத்தி, மணலூர் மற்றும் சிறுத்தொண்டநல்லூர் பகுதியில் அப்பகுதி மக்கள் குளித்து வந்தனர். ஆனால் தற்போது இந்த வாய்க்காலில் தண்ணீரே தெரியாத அளவிற்கு அமலை செடி மற்றும் ஆகாய தாமரைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன.

இதனால் இப்பகுதியில் பொதுமக்கள் குளிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் இந்த அமலை செடிக்குள் விஷ பாம்புகள் மற்றும் விஷசந்துகள் குடியிருக்கலாம் என பொதுமக்கள் அஞ்சுகின்றனர். மேலும் ஒரு சில இடங்களில் ஆண்களும், பெண்களும் படித்துறை பகுதியில் ஆக்கிரமித்துள்ள அமலை செடிகளை அகற்றி அதில் உள்ள தண்ணீரில் குளித்து வரும் போது உடலில் அரிப்பு ஏற்பட்டு தோல் நோய் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த அமலை செடிகளின் ஆக்கிரமிப்பால் தண்ணீர் மாசுப்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் இந்த மறுகால் வாய்க்காலில் ஆக்கிரமித்துள்ள அமலை செடிகளை பொதுமக்கள் நலன் கருதி அகற்றிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சிறுத்தொண்டநல்லூர் பகுதி மக்கள் கூறுகையில்; ‘எங்கள் ஊரில் பெரும்பாலும் இந்த மறுகால் வாய்க்காலில் தான் குளித்து வந்தனர். ஆனால் நாளாக நாளாக இந்த வாய்க்காலில் அமலை செடிகளின் ஆக்கிரமிப்பினால் தண்ணீர் மாசுப்பட்டு வருவதால் பெரும்பாலான மக்கள் இந்த வாய்க்காலில் குளிப்பதை தவிர்த்து வருகின்றனர்.

ஆனால் சிலர் இன்னும் இந்த வாய்க்காலில் தான் குளித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெருங்குளம் மறுகால் வாய்க்காலில் குறிப்பாக சிறுத்தொண்டநல்லுர் பாலம் அருகே இருந்து சூழவாய்க்கால் வடகால் வாய்க்காலில் தண்ணீர் சேரும் இடம் வரை உள்ள இடத்தில் அதிக அளவு அமலை செடிகள் ஆக்கிரமித்து உள்ளதையாவது உடன் அகற்றிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்’ என்றனர்.

Tags : Perungulam canal , Aral: Amala plants have encroached on the drain on the other side of the Perungulam pond. Due to this, bathing in the canal is obstructed
× RELATED வெப்ப அலை எதிரொலி; புதுக்கோட்டை அரசு...