தூத்துக்குடி ஹார்பர் சாலையில் மேம்பாலம் பணி விரைந்து முடிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஸ்பிக்நகர் : தூத்துக்குடி ஹார்பர் சாலையில் மேம்பாலம் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி ஹார்பர் சாலையில் ஏராளமான ஷிப்பிங் நிறுவனங்கள், பட்டானி, யூரியா, காப்பர் கான்ஸ்சென்ட்ரேட், ராக்பாஸ்பேட் போன்றவைகளை தேக்கி வைக்கக்கூடிய குடோன்கள், மின் உற்பத்தி நிலையங்கள், துறைமுகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்க கூடிய பகுதிகளில் தூத்துக்குடி ஹார்பர் சாலையும் பிரதான ஒன்றாக விளங்கி வருகிறது.

இதேபோல தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம், திருச்செந்தூர் முருகன் கோயில், மணல் மாதா ஆலயம், நவ திருப்பதி கோயில் உள்பட பிரசித்தி பெற்ற ஆன்மீக ஸ்தலங்களுக்கு இவ்வழியாகவே செல்ல வேண்டி உள்ளது. இதேபோல சுற்றுலா பயணிகள் சென்று பார்த்து மகிழும் பகுதியாக தூத்துக்குடி துறைமுகம் கடற்கரை பகுதி விளங்கி வருகிறது. இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலை உப்பாற்று ஓடை பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும்.

தற்போது தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலை உப்பாற்று ஓடை பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்து வருகிறது.இதனால் வாகனங்கள் தூத்துக்குடி செல்வதற்கும் அங்கிருந்து முத்தையாபுரம், முள்ளக்காடு பகுதிக்கு செல்வதற்கும் 1 கிலோ மீட்டர் தூரம் சென்று திரும்ப வேண்டியுள்ளது. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பக்கவாட்டில் 1 கிலோ மீட்டர் செல்ல வேண்டும் என்ற விதிமுறையை மீறி சில வாகனங்கள் எதிர்திசையில் பயணம் செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்படுகிறது.

தற்போது பாலம் அமைக்கும் பணிகளில் 70 சதவீதத்திற்கும் மேலான பணிகள் நிறைவடைந்துள்ளன. பக்கவாட்டு சுவர்கள் அமைக்கும் பணிகள் மற்றும் மணல் நிரப்பி மேடாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலை உப்பாற்று ஓடை பகுதிகளில் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதி என்பதால் மேம்பாலம் அமைக்கும் பணிகளில் கூடுதல் பணியாளர்களை நியமித்து பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பாலம் அமைப்பதில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: