பையோ மைனிங் முறையில் அகற்றப்படும் குப்பைகள்; அதிகளவிலான கார்பன், மீத்தேன் உமிழ்வை தடுத்த பெருமையை சென்னை மாநகராட்சி பெறும்: மேயர் பிரியா பேட்டி

சென்னை: சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் தேங்கியுள்ள குப்பைகளை பையோ மைனிங் முறையில் அகற்றி நிலத்தை மீட்டெடுக்க சென்னை மாநகராட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் நாளொன்றுக்கு சுமார் 5,000 டன் குப்பை கழிவுகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் கிடங்கில் சேர்க்கப்படுகின்றன. அங்கு மலை போல் காட்சியளிக்கும் கழிவுகளை சுற்றுசூழலுக்கு பாதிப்பில்லாமல் அகற்றி நிலத்தை மீட்டெடுக்கும் சென்னை மாநகராட்சியின் முயற்சி தான் பையோ மைனிங் திட்டம்.

குப்பைகளை கொஞ்ச கொஞ்சமாக எடுத்து அதிலிருந்து பிளாஷ்டிக் கழிவுகள், மக்கும் குப்பைகள், கற்கள், மணல் போன்றவை நவீன இயந்திரங்கள் மூலம் பிரிக்கப்படுகின்றன. பெருங்குடி கிடங்கி இருந்து குப்பைகளை அகற்றி நிலத்தை மீட்டெடுக்கும் பையோ மைனிங் முறை கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 350 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் 60% பணிகள் நிறைவு பெற்றன. பணிகள் தொடங்கி 17 மாத காலத்தில் 1.05 லட்சம் எடையுள்ள பிளாஷ்டிக் கழிவுகள் பிரித்து எடுக்கப்பட்டு மாற்று எரிபொருளாக சிமெண்ட் ஆலைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் 8 மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வு தடுக்கப்படுகிறது.

 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பெருங்குடி குப்பை கிடங்கு நிலத்தை பையோ மைனிங் முறையில் முழுவதுமாக மீட்டெடுக்கும் பணிகள் நிறைவுபெறும். அப்போது நாட்டிலேயே அதிகளவிலான கார்பன் மற்றும் மீத்தேன் உமிழ்வை தடுத்த மாநகராட்சி என்ற பெருமையை சென்னை மாநகராட்சி பெறும் என்கிறார் மேயர் பிரியா. நாட்டிலேயே மிகப்பெரிய அளவிலான குப்பை கிடங்கு உள்ள நிலத்தை மீட்டெடுத்து மறுபயன்பாட்டுக்கு சாத்தியமாக்கிய சாதனையை விரைவில் நிகழ்த்த உள்ளது பெருநகர சென்னை மாநகராட்சி.  

Related Stories: