ஆயுதங்களுடன் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு போலீசுக்கு போக்கு காட்டும் ‘கஞ்சா தமன்னா’-விருதுநகரில் தேடுகிறது தனிப்படை

கோவை :  போலீசுக்கு போக்கு காட்டும் கஞ்சா தமன்னாவை பிடிக்க கோவை தனிப்படை போலீசார் விருதுநகரில் முகாமிட்டுள்ளனர். கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்த ரவுடி கோகுல் (25). கோவை நீதிமன்றம் அருகே கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவர் கடந்த 2021ம் ஆண்டில் ரத்தினபுரியை சேர்ந்த ரவுடி குரங்கு ஸ்ரீராம் (22) என்பவர் வெட்டி கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்தார். இதற்கு பழி வாங்க கோகுல் கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது.

இந்த விவகாரத்தில் குரங்கு ஸ்ரீராம் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்த முக்கிய குற்றவாளிகள் குறித்து நகர போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ரத்தினபுரியில் வசித்து வந்த தமன்னா என்கிற வினோதினி (25) என்பவர் குறித்த தகவல் கிடைத்தது. இவர் பீளமேடு பகுதியில் தனது நண்பர் ஒருவருடன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இவரை போலீசார் கைது செய்தனர். சிறைக்கு சென்று ஜாமீனில் வந்த இவர் மேலும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது.

தனது நண்பர் சூர்யா (26) என்பவருடன் சேர்ந்து பணக்கார வாலிபர்களை சமூக வலைதளங்களின் மூலமாக நட்பு ஏற்படுத்தி வரவழைத்து மிரட்டி பணம் பறித்துள்ளதாக தெரிகிறது.

கையில் டாட்டூ வரைந்து சினிமா நடிகை போல் போட்டோக்களை பதிவிட்டு தமன்னா என அடைமொழி வைத்து இவர் பல்வேறு மோசடிகளை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. கோகுல் கொலைக்கு பின்னர் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு ஆட்சேபகரமான வீடியோக்கள், ஆயுதங்களுடன் காட்சி தந்த வீடியோக்கள் வெளியானது.

போத்தனூரை சேர்ந்த ரவுடி விக்கு சண்முகம் என்பவருக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமன்னா வெளியிட்டார். கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் அவர் வெளியிட்ட இந்த வீடியோ வைரலாக பரவியது. இவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. போலீசார் திருப்பூரில் தேடி வந்தனர். இந்நிலையில் இவர் விருதுநகர் தப்பி விட்டதாக தெரிகிறது. போலீசார் விருதுநகரில் தேடி வருகின்றனர்.

போலீசார் தேடி வந்த நிலையிலும் இவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இவரை கைது செய்தால் நகரில் உள்ள முக்கிய ரவுடிகள் குறித்த விவரங்கள் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: