×

கடலூர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 8 படகுகள் தீவைப்பு: காவல்துறையினர் விசாரணை

கடலூர்: கடலூர் அக்கரை கோரி மீனவ கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 8 பைபர் படகுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் முற்றிலுமாக எறிந்த சேதமடைந்துள்ளது. கடலூர் அடுத்த துறைமுகம் அக்கரை கோரியில் 8 பைபர் படகுகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் அடுத்த சிங்காரத்தோப்பு, சோனங்குப்பம், அக்கரை கோரி உள்ளிட்ட 3 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் தினந்தோறும் இங்கிருந்து பைபர் படகுகளில் மீனவர்கள் மீன் பிடித்து விட்டு துறைமுகம் அக்கரை கோரி பகுதியில் தினமும் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு செல்வார்கள்.

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றனர். நேற்று நள்ளிரவு அக்கரை கோரி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் திடீரென்று எரிய தொடங்கியது. இதனை தொடர்ந்து வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த படகுகள் ஒவ்வொன்றிலும் தீ பரவி கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அப்பகுதியில் இருந்த பொதுமக்களிடம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஊர் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டு கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த பைபர் படகுகளை தண்ணீர் ஊற்றி நீண்ட நேரம் போராடி அணைத்தனர்.

இதில் 6 படகுகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன. இது பற்றிய தகவல் அறிந்த கடலூர் துறைமுகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயில் கருகி எரிந்த படகுகள் மற்றும் வலைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அக்கரை கோரி கிராமத்தை சேர்ந்த ரஞ்சித், குப்புசாமி, அன்பு, மேகநாதன், பாலமுருகன், பவலேஷ், சாமிநாதன், மகேந்திரன் ஆகிய 8 பேரின் பைபர் படகுகள் மற்றும் வலைகள் எரிந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைபர் படகுகள் மற்றும் வலைகளுக்கு தீ வைத்த மர்மநபர்கள் யார்? முன் விரோதம் காரணமாக தீ வைத்தார்களா? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Cuddalore harbour , Cuddalore, boat, arson, police, investigation
× RELATED தானே புயலால் சேதம் அடைந்த கடலூர்...