சென்னை தி.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ளபத்மாவதி தாயார் கோயிலுக்கு 17ம் தேதி குடமுழுக்கு விழா

சென்னை: சென்னை, தி.நகரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலின், குடமுழுக்கு விழா வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோயிலின் குடமுழுக்கு விழா வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த திருப்பதி திருமலை தேவஸ்தான தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கான ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி கூறியதாவது: 13 ஆண்டுகளாக பல பிரச்னைகளை கடந்து தற்போது குடமுழுக்கு நடைபெற உள்ளது. சென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பத்மாவதி தாயார் கோயில் தேவஸ்தானம் சார்பில் 2021 பிப்ரவரி 13ம் தேதி கோயில் பணிகள் தொடங்கின. இன்று மாலை பூஜைகள் தொடங்கி 16ம் தேதி வரை காலை மற்றும் மாலை என ஹோமங்கள் நடைபெறும். 17ம் தேதி காலை 7.30 மணி முதல் 7.44க்குள் குடமுழுக்கு நடைபெறும். 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கிறார்.

குடமுழுக்கு முடிந்த பின்பு, காலை 10 முதல் 11 மணி வரை வரை திருக்கல்யாணம் நடக்க உள்ளது. பொதுமக்களுக்கு 11 மணி முதல் சாமி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் வாகனம் நிறுத்த, ராமகிருஷ்ணா பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி முதல் காசி வரை பிரமாண்டமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோயில்களை கட்டி வருகிறோம். உளுந்தூர்பேட்டையில் அடுத்த ஆண்டு கட்டுமானப் பணி முடிவடையும். வேலூரிலும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் புதுப்பிக்கப்பட உள்ளது.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: