தங்கசாலை மேம்பாலம் அருகே ரூ.4.5 கோடியில் பசுமை பூங்கா பணி: தலைமை செயலர் ஆய்வு

தண்டையார்பேட்டை: தங்கசாலை மேம்பாலம் அருகே அமைக்கப்பட்டு வரும் பசுமை பூங்கா பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.  ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட தங்கசாலை மேம்பாலம் அருகே, ரூ.4.5 கோடி செலவில் மியாவாக்கி காடுகளுடன் பசுமை பூங்கா அமைக்கும் பணியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த மாநகராட்சி பூங்காவில், 1,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை கொண்ட மியாவாக்கி காடு அமைக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக வேம்பு, புங்கை, நீர்மருது, மூங்கில், பாதாம், இலுப்பை, மாமரம், அரசமரம் உள்ளிட்ட நாட்டு மரங்களும், எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வகை மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன. 1 கி.மீ., தூரத்தில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதில், 13 ஆயிரம் சதுர மீட்டர் அளவில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.  மேலும் சிறுவர்களுக்கான விளையாட்டுத் திடல், தியான மண்டபம், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம், நடைபயிற்சி உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பேவர் பிளாக் நடைபாதை, பூங்கா முழுவதும் எல்.இ.டி‌. விளக்குகள், இருக்கைகள்,  ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோருக்கான கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவை இங்கு செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் விளையாட்டு சாதனங்களுடன் கூடிய சிறுவர் விளையாட்டுத் திடலில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. கூழாங்கல் நடைபாதை மற்றும் பாதுகாப்பு கம்பிகளுடன் கூடிய சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது பூங்கா பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று இந்த பூங்காவிற்கு வந்து பணிகள் குறித்து கேட்டறிந்தார்.  அடுத்த மாதம் இந்த பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாகவும், இந்தப் பூங்காவின் முக்கிய அம்சமாக  மியாவாக்கி காடுகள் போக்குவரத்து அதிகமுள்ள பகுதியில் அமைவதால் அதிக அளவு ஆக்சிஜன் உற்பத்தி ஆகும். இதன் காரணமாக சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது குறையும், என தலைமை செயலாளர் தெரிவித்தார்.   இந்த ஆய்வின்போது ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, வடக்கு வட்டார துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் வேளாங்கண்ணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Stories: