×

தேசிய அளவில் நடைபெற்ற துடுப்பு போடுதல் போட்டியில் அரசு பள்ளி மாணவி அசத்தல்: பல்வேறு போட்டிகளில் வெற்றிகளை குவிக்கும் மாணவர்கள்

அரசுப்பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. காரணம், பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி, மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் மூலம் மாணவர்கள் கல்வி மட்டுமின்றி விளையாட்டு, கலை, தனித்திறன் ஆகியவற்றில் சிறந்து விளங்குகின்றனர். அதற்கு உதாரணமாக போரூர் அடுத்துள்ள அய்யப்பன்தாங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் அய்யப்பன்தாங்கல், கொளுத்துவான்சேரி, செட்டியார் அகரம், தெள்ளியார் அகரம், நூம்பல், துண்டலம், பரணிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 900 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்வியுடன், தனித்திறன், விளையாட்டு போன்றவற்றிலும் இந்த மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.  இதில் 150 மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுத்துறை சார்ந்த பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. குறிப்பாக, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடை ஓட்டம், கால்பந்து, கேரம், செஸ், கபடி, மும்முறை தாண்டுதல், ஓட்டப்பந்தயம், துடுப்பு போடுதல் உள்பட பல்வேறு  விளையாட்டுகளில் வெற்றிகளை வாரி குவித்து வருகின்றனர்.

குறிப்பாக, 11ம் வகுப்பு மாணவி மதுமிதா, துடுப்பு போடுதல் போட்டியில் தேசிய அளவில் 2ம் இடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். அதேபோல், எழில்சுந்தர் என்ற 7ம் வகுப்பு மாணவன் சதுரங்கப் போட்டியில் மாவட்ட அளவில் 2ம் இடம் பெற்று பரிசு பெற்றுள்ளார். 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான நீளம் தாண்டுதல், 80 மீட்டர் தடை தாண்டுதல் போட்டிகளில் வட்டார அளவில் 8ம் வகுப்பு மாணவி பஞ்சவர்ணம் முதலிடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.  11ம் வகுப்பு படிக்கும் நிஷாந்த் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வட்டார அளவில் முதலிடம் பிடித்துள்ளார். 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 7ம் வகுப்பு படிக்கும் தினேஷ்குமார் என்ற மாணவன் வட்டார அளவில் நடைபெற்ற போட்டியில் 2ம் இடம் பிடித்துள்ளார். வட்டார அளவில் நடைபெற்ற போட்டிகளில் 9ம் வகுப்பு மாணவரான சுனில்குமார், தொடர் ஓட்ட போட்டியில் 3ம் இடமும், துர்கேஷ் மும்முறை தாண்டுதல் போட்டியில் 2ம் இடமும் பெற்றுள்ளனர். அதேபோல 11ம் வகுப்பு மாணவரான ரஞ்சித், மும்முறை தாண்டுதல் போட்டியில் முதலிடமும், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 2ம் இடமும் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். மாவட்ட அளவில் நடைபெற்ற நீளம் தாண்டுதல் போட்டியில் 9ம் வகுப்பு மாணவன் மோனிஷ் 2ம் பரிசு பெற்றுள்ளார்.

இதுகுறித்து விளையாட்டு பயிற்சி ஆசிரியர் வினோத் கூறுகையில், ‘‘அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலானோர் வசதி வாய்ப்பு இல்லாதவர்கள். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் வசதி உள்ளவர்கள். தனியார் பயிற்சி மையங்களில் விளையாட்டு பயிற்சி பெறுகின்றனர். ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வசதி இல்லாததால் அரசாங்கம் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கிறது. அப்படிப்பட்ட மாணவர்களுக்கு பயிற்சியாளராக இருந்து விளையாட்டுத்துறையில் சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளிடையே உள்ள விளையாட்டு ஆர்வத்தை கவனித்து கண்டறிந்து அவர்களுக்கு தனியாக பயிற்சி அளித்து வருகிறேன்,’’ என்றார்.  மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்க நிதி உதவியை அரசு வழங்கினால், உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் கூட நமது தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனைகள் படைப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

* வாகைசூடும் அணிகள் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான வட்டார அளவிலான கால்பந்து போட்டியில் இந்த  பள்ளியில் படித்து வரும் 18 மாணவிகள் கொண்ட அணி 2ம் இடம் பிடித்துள்ளது  குறிப்பிடத்தக்கது. வட்டார அளவில் நடைபெற்ற 14 வயது மற்றும் 19  வயதுடையவர்களுக்கான கபடிப் போட்டியில் கோகுல், ஜனா, அருண், மகேஷ், வீரமணி,  மும்முடி உள்ளிட்ட மாணவர்கள் அடங்கிய அணி 2 போட்டிகளிலும் 2ம் பரிசு பெற்று  பள்ளிக்கு பெருமை தேடித் தந்துள்ளனர்.

* திறம்பட பயிற்சி  உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வரும் எம்.வினோத், 14 ஆண்டுகள்  காவல்துறையில் பணியாற்றியுள்ளார். மேலும் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில்  தேசிய தடகளப் பயிற்சியாளருக்கான படிப்பை முடித்துள்ள தான் கற்றுக்
கொண்ட  உடற்கல்வி தொடர்பான  அனைத்து விஷயங்களையும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு  கற்றுக் கொடுத்து அவர்களை உலக அளவில் விளையாட்டுத்துறையில் ஜொலிக்க வைக்க  வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு மாணவர்களுக்கு அவர் பயிற்சி அளித்து  வருகிறார்.



Tags : National Rowing Competition , Govt School Girl Amazed at National Rowing Competition: Students accumulate victories in various competitions
× RELATED தேசிய அளவில் நடைபெற்ற துடுப்பு...