×

தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி பாஜவை வளர்க்க முயற்சி: பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

கூடலூர்: தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி பாஜவை வளர்க்க ஒன்றிய அரசு முயற்சி மேற்கொள்கிறது. இது கண்டிக்கத்தக்கது என மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாநில பொது செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாத கூடலூர் சட்டமன்ற தொகுதி விவசாயிகளின் நிலப்பிரச்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட வரலாறு குறித்த விளக்க பொதுக்கூட்டம் கூடலூர் காந்தி திடலில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியது:

தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், ஒன்றிய அரசுக்கு ஆதரவாகவும்  செயல்படும் நிலை கண்டிக்கத்தக்கது. ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்தின் அவசர  சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, ஆறு மாத காலம் அவகாசம் அளித்து, நிரந்தர  சட்டம் கொண்டு வர சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அளித்து  நான்கு மாதத்திற்கு பின் தடை சட்டம் கொண்டு வர மாநில அரசுக்கு உரிமை உள்ளதா?  என கேள்வி எழுப்புகிறார். இது ஆன்லைன் நிறுவனங்களுக்கு ஆதரவான நிலைப்பாடு. இதன் பின்னணியில் ஒன்றிய பாஜ அரசு உள்ளது.
தமிழ்நாட்டில் கலவரத்தை  ஏற்படுத்தி பாஜவை வளர்க்க ஒன்றிய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை கண்டிக்கிறோம். தமிழ்நாட்டு மக்கள் பாஜவின் முயற்சியை முறியடிப்பார்கள்.

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக  பணி செய்து வரும் நிலையில், திடீரென பீகார் மாநிலத்தைச் சேர்ந்த  தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக கூறி பொய்யான தகவல்களை பரப்பி  பீகார் சட்டமன்றத்தில் பிரச்னை எழுப்பப்பட்டது. ஆனால் தமிழ்நாடு அரசும்  காவல்துறையும் மிக சிறப்பாக கவனமாக செயல்பட்டு பதற்றமான சூழல் உருவாகுவதை  தடுத்து பாதுகாப்பான சூழலில் வட மாநில தொழிலாளர்கள் பணி செய்வதை உறுதிப்படுத்தி தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் ஒன்றிய அரசின் சதி  திட்டத்தை முறியடித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Baja ,Tamil Nadu ,Balakrishnan , Trying to promote BJP by creating riots in Tamil Nadu: Balakrishnan accused
× RELATED தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்...