சென்னை: தமிழ்நாடு அரசு உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஏப்ரல் 10ம் தேதி ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்க மற்றும் இணைப்பு சங்கங்களின் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநில தலைவர் மதுரம், தேசிய தலைவர் கணேசன் கூறியதாவது: மாநகராட்சி, நகராட்சிகளில் அலுவலக உதவியாளர்கள், இரவு காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் நியமனத்தை தடுத்து தனியார் மயமாக்கும் அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பழைய முறையிலேயே பணி நியமனங்கள் நடைபெற வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 12,526 ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களை காலமுறை ஊதியத்திற்குள் கொண்டு வர வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் விடுதிகளில் துப்புரவு பணியாளர்களை காலமுறை ஊதியத்திற்குள் கொண்டு வர வேண்டும்.அதேபோல் காலியாக உள்ள விடுதி சமையலர் பணியிடத்தை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், சீர்மரபினர் நல விடுதிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களை காலமுறை ஊதியத்திற்குள் கொண்டு வர வேண்டும். அங்கு காலியாக உள்ள சமையலர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். தமிழ்நாடு அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏப்ரல் 10ம் தேதி சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.
