இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக குடியேற முயன்ற 683 இந்தியர் கைது

லண்டன்: கடந்த ஆண்டு சட்ட விரோதமாக குடியேற முயன்ற 683 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.இங்கிலாந்து பிரதமராக  ரிஷி சுனக் உள்ளார். இந்திய வம்ச வளியான சுனக்  பிரதமராகப் பொறுப்பேற்றதிலிருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.  அதன் ஒரு பகுதியாக தற்போது குடியேற்றம் தொடர்பாக புதிய சட்டத்தை வடிவமைத்துள்ளார். இங்கிலாந்தில் இந்த சட்டவிரோத நுழைவு ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருவதால் இதைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க  இங்கிலாந்து அரசு முனைப்புக் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் தான் சட்டவிரோத குடியேற்றச் சட்டம் என்ற புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.    

இந்தியா வம்சாவளியை சேர்ந்த உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவெர்மன் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் பேசும்போது,‘‘  இந்த சட்டத்தின் படி, சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைபவர்கள் புகலிடம் கேட்க முடியாது.  சிறிய படகுகள் மூலம் சட்ட விரோதமாக நாட்டுக்குள் நுழைந்தால் அவர்களுடைய சொந்த நாட்டுக்கோ அல்லது பாதுகாப்பான மூன்றாவது நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவர்.  அதே போல் இவ்வாறு வருபவர்கள் எதிர்காலத்தில் இங்கிலாந்துக்குள் வருவதற்கும், குடியுரிமை பெறுவது தடை செய்யப்படும்.  ஒருவர் சட்டப்படிதான் இந்த நாட்டுக்குள்  வரலாம்.  சட்ட விரோதமாக இங்கு வந்து விட்டு  புகலிடம் கோரி, வாழ்க்கை அமைப்பதை அரசு ஏற்று கொள்ளாது’’ என்றார்.

பிரதமர் சுனக் நாடாளுமன்றத்தில் பேசுகையில்,‘‘ சட்டவிரோதமாக வருபவர்களை திருப்பி அனுப்புவது தொடர்பாக இந்திய அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது’’ என்றார். இங்கிலாந்து உள்துறை அலுவலகம் வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி, கடந்த ஆண்டு இங்கிலாந்து தென்கிழக்கு கடலோர பகுதி வழியாகச் சிறிய படகுகள் மூலம் 45 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக  நுழைந்துள்ளனர்.  ஏராளமான இந்தியர்கள் சட்ட விரோதமாக அங்கு குடியேற முயற்சிக்கின்றனர். இதில் இந்தியர்கள் எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டு 64 பேர், 2021ல் 67, 2022ல் 683  ஆக உயர்ந்துள்ளது. இப்படி வருபவர்களில் பெரும்பாலானோர் 25 வயது முதல் 40 வயதுக்குட்டவர்கள். இவர்கள்  சிறிய படகுகளில் நாட்டுக்குள் வருகின்றனர். ஏஜென்டுகள் லட்சக்கணக்கான பணத்தை வாங்கி கொண்டு  இவர்களை படகில் அனுப்பி விடுகின்றனர் என தெரியவந்துள்ளது. சட்டவிரோத குடியேற்றக்காரர்களை கைது செய்து அடைக்க  காவல் தடுப்பு மையம் அமைக்கவும்,  கண்காணிப்பு பணிக்கு டிரோன்கள் வாங்க நிதி ஒதுக்கப்படும். மேலும் கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.  

Related Stories: