×

அஞ்செட்டி அருகே சாலையோரம் நீண்ட நேரம் நின்ற ஒற்றை யானையால் பீதி: வாகன ஓட்டிகள் அச்சம்

தேன்கனிக்கோட்டை: அஞ்செட்டி அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, மறுபக்கம் செல்வதற்காக சாலையில் நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப்பகுதியில் உள்ள யானைகள், கோடை தொடங்கி உள்ளதால் உணவு, தண்ணீர் தேடி அவ்வப்போது சாலையை கடந்து, மறுபக்கம் உள்ள காட்டிற்குள் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஒற்றை யானை ஒன்று, அஞ்செட்டி - தேன்கனிக்கோட்டை சாலையோரம் காட்டுப் பகுதியில் நின்றிருந்தது.

இதைப்பார்த்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், வாகனங்களை சாலையில் போட்டு சிதறி ஓடினர். சிலர் சாலையில் தூரத்தில் வாகனத்துடன் நின்றபடி யானைகள் சாலையை கடந்துசெல்வதை தங்களின் செல்போன்கள் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். நீண்டநேரம் சாலையில் நின்று கொண்டிருந்த ஒற்றை யானை, பின்னர் காட்டின் மறுபகுதிக்கு சென்றது. இதையடுத்து வாகன ஓட்டிகள் புறப்பட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Anjetti , Anjetti, Panic by a single elephant, motorists fear
× RELATED வத்தல்மலை அடிவாரத்தில்...