×

2024 தேர்தலுக்கு முன் ஆளும் பாஜகவை சுற்றி வளைக்கும் எதிர்கட்சிகள்; 27 ஆண்டுக்கு பின் விஸ்வரூபம் எடுக்கும் 33% மகளிர் இடஒதுக்கீடு மசோதா: தேவகவுடா தொடங்கியதை மோடி அமல்படுத்துவாரா?

புதுடெல்லி: அடுத்தாண்டு தேர்தலுக்கு முன்னதாக ஆளும் பாஜகவை சுற்றிவளைக்கும் வகையில் 27 ஆண்டுக்கு பின்னர் 33% மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இவ்விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளதால் ஒன்றிய பாஜக அரசுக்கு நெருக்கடி முற்றி வருகிறது.  

பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் மீது அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், மகளிர் இடஒதுக்கீடு கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இந்த கோரிக்கை வலியுறுத்தி தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும் எம்எல்சியுமான கே.கவிதா ராவ் நேற்று முன்தினம் டெல்லியின் ஜந்தர் மந்தரில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். இவரது போராட்டத்திற்கு 17 எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன. மகளிர் இடஒதுக்கீடு கோரிக்கைக்கு மத்தியில் நேற்று டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை முன் கே.கவிதா ஆஜரானார்.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மகளிர் இடஒதுக்கீட்டுக்கான மசோதா 2010ம் ஆண்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் இன்னும் நிறைவேற்றவில்லை. இந்த மசோதா இன்னும் காலாவதியாகவில்லை. எனவே ஆளும் பாஜக அரசு, இந்த மசோதாவை அறிமுகப்படுத்தி நிறைவேற்ற வேண்டும். நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார். மேலும், வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில், மீண்டும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எதிர்கட்சிகள் தற்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதா கோரிக்கையை எழுப்பி வருவதால் தேசிய அரசியலில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் பின்னணி குறித்து ஊடகங்களில் பேசப்பட்டு வருகின்றன. கடந்த 1996ம் ஆண்டில், அப்போதைய பிரதமர் எச்.டி.தேவகவுடா தலைமையிலான ஒன்றிய அரசு ஆட்சியில் இருந்த போது, முதல் முறையாக நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தேவகவுடா தலைமையிலான அரசில், இச்சட்டத்தை கொண்டு வரமுடியவில்லை.

கடந்த 2010ம் ஆண்டில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சி காலத்தில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் பெரும்பான்மை இல்லாததால், இந்த மசோதா முடக்கப்பட்டது. இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தால் மகளிருக்கான 33 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். அதேபோல் மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் பல்வேறு தொகுதிகளில் பெண்களுக்கு சுழற்சி முறையில் இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்க முடியும்.

தற்போது ஆளும் பாஜகவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறுதிப் பெரும்பான்மை இருந்தும், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றாமல் உள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல், இந்தாண்டு 6 மாநில சட்டப் பேரவை தேர்தல் போன்ற காரணங்களால் அரசியல் கட்சிகள் மீண்டும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கையில் எடுத்துள்ளன. இந்த மசோதா விவகாரம் ஆளும் பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. அதேநேரம் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து வருகிறது.

இந்திய மகளிர் தேசிய கூட்டமைப்பு தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், ‘மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை  மக்களவையில் தாக்கல் செய்யாதது சட்டவிரோதமானது மற்றும்  பாலின பாகுபாட்டிற்கு வழிவகுக்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை இந்த மாதத்தின் கடைசி வாரத்தில்  நடைபெறவுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அமர்வு விசாரிக்கிறது. கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு மேலாகியும் மகளிர் இடஒதுக்கீடு மசோத நிறைவேற்றப்படாமல் உள்ள நிலையில், வரும் பட்ஜெட்  கூட்டத்தொடரிலோ அல்லது மழைக்கால கூட்டத்தொடரிலோ மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

அரசியல் கட்சிகளுக்கு அச்சம் ஏன்?: பெண்களுக்கான சம உரிமை வழங்கப்படும் நிலையில், அவர்களுக்கு அதிகாரம் வழங்கும் விஷயத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் பாகுபாட்டை வெளிப்பிடுத்தி வருகின்றன என்ற விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது. மகளிருக்கு 33 சதவீத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், வாக்கு வங்கி அரசியலில் சிக்கல் ஏற்படும் என்றும், அதனால் எந்தக் கட்சியும் அதில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமல்படுத்தப்பட்டால், தற்போதுள்ள 33 சதவீத ஆண் எம்பிக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும். தற்போது 10 முதல் 15 சதவீத பெண்கள் எம்பிக்களாக இருந்தாலும், மேலும் 15 முதல் 18 சதவீத பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அதேபோல் மாநில, யூனியன் பிரதேச சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் பூர்த்தியடையும்.

12 மாநிலங்களில் பெண் வாக்காளர்கள் அதிகம்: மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வரும்பட்சத்தில் 33% பெண்கள் எம்பிக்களாக இருக்க முடியும். ஆனால் தற்போது 543 எம்பிக்களில் 78 பேர் (15 சதவீதம்) மட்டுமே பெண் எம்பிக்கள் உள்ளனர். மாநிலங்களவையில் 250 எம்பிக்களில் 32 பேர் (14 சதவீதம்)மட்டுமே பெண் எம்பிக்கள் உள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் பெண்களின் பங்கு 5 சதவீதம் மட்டுமே உள்ளது. மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு மிகவும் பரிதாபமான நிலையில் தான் உள்ளது. அதன்படி, ஆந்திரா, அசாம், கோவா, குஜராத், இமாச்சல பிரதேசம், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 9 சதவீதத்திற்கும் குறைவான பெண் எம்எல்ஏக்கள் மட்டுமே பதவியில் உள்ளனர்.
பீகார், உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், டில்லி ஆகிய மாநிலங்களில் 10 சதவீதத்திற்கும் அதிகமாகவும், 15 சதவீதத்திற்கும் குறைவாகவும் பெண் எம்எல்ஏக்கள் உள்ளனர். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களின் பங்களிப்பு 15 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கலாம்; ஆனால் 12 மாநிலங்களில் ஆண்களை காட்டிலும் பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, அருணாச்சலப் பிரதேசம், கோவா, உத்தரகண்ட் உள்ளிட்ட 12 மாநிலங்களில் பெண் வாக்காளர்கள் அதிகம் வாக்களித்தனர். பீகார், ஒடிசா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு கிட்டத்தட்ட சமமாக இருந்தது.

இந்த மாநிலங்களில் 200க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளில் பாஜக ஆதிக்கம் செலுத்துகிறது. தமிழகம், ஒடிசா போன்ற மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் பெண்களின் வாக்குகளைப் பெற்றன. மக்களவை தொகுதிகளின்படி பார்த்தால் 73 தொகுதிகளில் ஆண்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆந்திராவில் 19 தொகுதிகள், பீகாரில் 10 தொகுதிகள், கேரளாவில் 10 தொகுதிகள், தமிழ்நாட்டில் 16 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் ஒரு தொகுதி அடங்கும். இருப்பினும், மேற்கண்ட தொகுதிகளில் ஆண் எம்பிக்களே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் 2019ம் நடந்த மக்களவை தேர்தலில், பிஜு ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் 33 சதவீத ெபண் வேட்பாளர்கள் போட்டியிட வாய்ப்பு கொடுத்தன.

Tags : bajha ,2024 elections ,Modi , Opposition parties to surround ruling BJP ahead of 2024 elections; 33% Women's Reservation Bill Takes Shape After 27 Years: Will Modi Implement What Deve Gowda Started?
× RELATED தூர்தர்ஷன் தொலைக்காட்சியின்...