மேற்குவங்கத்தில் 3வது முறையாக வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் மூன்றாவது முறையாக மீண்டும் கற்கள் வீசப்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர். மேற்குவங்க மாநிலம் ஃபராக்கா அடுத்த முர்ஷிதாபாத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்த போது, அந்த ரயிலின் மீது மர்ம நபர்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் ரயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. கல்வீச்சில் யாரும் காயமடைந்ததாக தகவல் இல்லை.

இதுகுறித்து கிழக்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி (சிபிஆர்ஓ) கவுசிக் மித்ரா கூறுகையில், ‘வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது’ என்று கூறினார். முன்னதாக, கடந்த ஜனவரியில் டார்ஜிலிங் அடுத்த பான்சிதேவா என்ற இடத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் மீது கற்கள் வீசப்பட்டன. அதேபோல் ஹவுரா-நியூ ஜல்பைகுரி இடையிலான வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசப்பட்டன. மேற்கு வங்கம் தவிர, தெலங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன.

Related Stories: