விராலிமலையில் பக்தர்கள் வசதிக்காக முருகன் மலைக்கோயில் பாதையில் கைப்பிடி அமைக்கும் பணி மும்முரம்: பொதுமக்கள் பாராட்டு

விராலிமலை: விராலிமலை முருகன் மலைக்கோயில் மேலே செல்லும் தார் சாலையின் ஓரங்களில் எஸ்எஸ் கைப்பிடி பைப் அமைக்கும் பணி தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை நகரின் மத்தியில் அமைந்துள்ள 227 படிகள் கொண்ட வனப்பகுதி சூழ்ந்த மலைக்கோயிலின் மேலே பக்தர்கள் வாகனங்களில் செல்லுவதற்கு எளிதாக தார்சாலை அமைக்கப்பட்டு பக்தர்கள் வாகனங்கள் மூலம் எளிதாக மேலே சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தார்சாலை ஓரங்களில் சிமென்ட் தடுப்பு கட்டைகள் மட்டும் இடைவெளி விட்டு விட்டு அமைக்கப்பட்டிருந்ததால் வாகனத்தில் செல்வோருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வந்தது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிமென்ட் தடுப்பு கட்டையின் இடைவெளியில் சிக்கி கொண்டால் கிழே விழும் சூழழும் இருந்து வந்தது. இதனால் சாலை ஓரங்களில் கைப்பிடி பைப் அமைத்து பக்தர்கள் மேலே சென்று வருவதற்கு ஏதுவாக அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்கள் மத்தியில் வலுத்து வந்தது.

இதனையடுத்து பார்க்கிங் பகுதி சுற்றுப்புறத்தில் 210 அடி மற்றும் தார்சாலையின் கீழிருந்து மேல் பகுதி முடிவு சாலை வரை 300 அடி என மொத்தம் 510 அடியில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறை நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் எஸ்எஸ் கைப்பிடி பைப் அமைக்கும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் இன்னும் ஓரிரு நாளில் முடிவடையும் என்று நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இதன் மூலம் பக்தர்களின் பாதுகாப்பான பயணம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மலைப்பாதையில் கைப்பிடி குழாய் அமைக்கப்படுவதால் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Stories: