பெங்களூரு - மைசூரு அதிவிரைவு சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்க வந்த பிரதமர் மோடிக்கு கர்நாடகாவில் உற்சாக வரவேற்பு

கர்நாடகா: பெங்களூரு - மைசூரு அதிவிரைவு சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்க வந்த பிரதமர் மோடிக்கு கர்நாடகாவில்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. மாண்டியாவில் அரசு நிகழ்ச்சிக்கு வந்த பிரதமர் மோடிக்கு 2 கி.மீ தூரத்திற்கு மலர்த்தூவி தொண்டர்கள் வரவேற்றனர். காரரில் விழுந்த பூக்களை மீண்டும் பாஜகவினர் மீது வீசி மகிழ்ச்சியை பிரதமர் மோடி வெளிப்படுத்தினார்.

ரூ.16,000 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இன்று பிற்பகல் 12 மணிக்கு மாண்டியாவில் முக்கிய சாலைத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பதுடன் புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்ட உள்ளார். அதன் பின்னர் பிற்பகல் 3.15 க்கு ஹூப்பளி – தார்வாடாவில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் நாடு முழுவதும் உலகத் தரத்தில் உள்கட்டமைப்புத் திட்டங்கள் விரைந்து மேம்படுத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக பெங்களூரு – மைசூரு விரைவுச் சாலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். பெங்களூரு – நிதாகட்டா – மைசூரு தேசிய நெடுஞ்சாலை என்.ஹெச்-275-ன் ஒரு பகுதியை ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் இதில் அடங்கும். 118 கி.மீ தூரத்திலான இந்தத் திட்டம் ரூ.8480 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சாலை பெங்களூரு மற்றும் மைசூருக்கு இடையேயான பயண நேரத்தை 3 மணி நேரத்திலிருந்து 75 நிமிடமாக குறைக்கும். இது அப்பகுதியின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கு ஊக்கமளிக்கும். மைசூரு – குஷால் நகர் இடையேயான நான்கு வழி நெடுஞ்சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். 92 கிலோமீட்டர் நீளத்தில் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டம் ரூ.4130 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. பெங்களூருடனான குஷால் நகரின் இணைப்பை இத்திட்டம் மேம்படுத்தும் என்பதுடன் பயண நேரத்தை, 5 மணி நேரத்திலிருந்து 2.30 மணி நேரமாக குறைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: