துரைப்பாக்கம்: துரைப்பாகம் கண்ணகி நகரில் ஆட்டோக்களை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பலில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரகு (23). இவரது ஆட்டோ கண்ணாடியை சிலர் உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரகு, தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு ஆட்டோவை உடைத்த நபரிடம் சென்று தட்டிக் கேட்டுள்ளார். பின்னர் அனைவரும் கஞ்சா மற்றும் மது அருந்திவிட்டு சமரசமாகினர். இதையடுத்து ரகு மற்றும் அவரது நண்பர்கள் என 6 பேர் சேர்ந்து கும்பலாக கஞ்சா மற்றும் மது போதையில் அங்கிருந்து வீட்டிற்கு நடந்து வந்தனர். கண்ணகி நகர் 12வது தெரு வழியாக வந்தபோது சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 6 ஆட்டோக்களை கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களால் அவர்கள் அடித்து நொறுக்கினர். இதில் ஆட்டோக்களில் முன், பின் கண்ணாடிகள் நொறுங்கின. சத்தம் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வெளியேவந்து பார்த்தபோது, கத்தியைக் காட்டி மிரட்டியதால் அவர்கள் வீட்டுக்குள் தஞ்சம் அடைந்தனர்.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் கண்ணகிநகர் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி கும்பலை சேர்ந்த ரகு (23), பிரபாகரன் (22), தனுஷ் (19), முருகவேல் (28) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தபோது ரகு, முருகவேல் ஆகிய இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 4 பேரை கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தப்பிய ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர். நேற்று அதிகாலை நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
