×

தாம்பரத்தில் சிறுதானிய உணவு திருவிழா திறப்பு அனைவரும் பாரம்பரிய உணவு பழக்கத்திற்கு மாற வேண்டும் : அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுரை

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி மற்றும் செங்கல்பட்டு உணவு பாதுகாப்பு துறை சார்பில், சிறுதானிய உணவு திருவிழா தாம்பரம் ரயில்வே மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது. செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தலைமை வகித்தார். இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், எம்எல்ஏக்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, சோழிங்கநல்லூர் அரவிந்த் ரமேஷ், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிறுதானிய உணவுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தான்யன் மாஸ்கட்டை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டார். பிறகு அவர் பேசியதாவது:

தமிழர்களின் பாரம்பரிய உணவு முறையில் முதலிடத்தில் இருந்தது தினை, கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் உடலுக்கு வலிமை சேர்க்கும். அதன்பிறகே அரிசி, கோதுமை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சிறுதானியங்கள் பயன்படுத்துவது மக்களிடையே குறைந்ததால், விவசாயிகளும் அதனை பயிரிடுவதை குறைத்து கொண்டனர். ஆனால், இன்றைய இளைய சமுதாயத்தினர் இடையே, ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இயற்கை உணவு முறைக்கு மாற ஆர்வம் காட்டுகின்றனர். ஆகவே, பெற்றோர்களும், உணவு தயாரிப்பாளர்களும் பாஸ்ட் புட், ஜங்க் புட் ஆகியவற்றை தவிர்த்து ஆரோக்கியமான சிறு தானிய உணவிற்கு மாற வேண்டும்.

இளைஞர்கள் முதல் பெரியோர் வரை தங்களுடைய உணவு பழக்கவழக்கத்தை மாற்ற வேண்டிய முக்கியமான காலக்கட்டத்தில் உள்ளோம். அந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இந்த விழா சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாம் அனைவரும் சிறுதானியங்களை நம் உணவில் ஒவ்வொரு நாளும் சேர்த்து கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார். பின்னர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, தொழில் முனைவோருக்கான ஆதார நிதியில் ரூ.3.84 லட்சமும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான வங்கி கடன் ரூ.44 லட்சம் பெறுவதற்கான ஆணையையும் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் பிரதமரின் குறு உணவு பதப்படுத்தல் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தப்படும் திட்டத்தின் கீழ், ரூ.11.02 லட்சம் கடன் உதவிகளை 11 பேருக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

 முன்னதாக 551.20 கிலோ எடையில் சிறுதானியத்தில் உருவாக்கப்பட்ட கேக் மற்றும் கல்லூரிகளை கொண்டு சிறுதானியகள் மூலம் உருவாக்கப்பட்ட 600 வகையான உணவு பொருட்களுக்கு டிரம்ப் உலக சாதனை சான்றிதழை அமைச்சர் வழங்கி னார். இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, மண்டலக்குழு தலைவர்கள் எஸ்.இந்திரன், இ.ஜோசப் அண்ணாதுரை, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா, தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Ministerial Food Festival ,Tambara ,Minister ,T.R. Moe Andarasan , Inauguration of Small Grain Food Festival in Tambaram Everyone should switch to traditional food habits: Minister Thamo Anparasan advises
× RELATED 40க்கு 40 என்ற சபதத்தை முதல்வர்...