×

திருந்தி வாழப்போவதாக கூறி குற்றச்செயல்களில் ஈடுபட்ட 9 குற்றவாளிகளுக்கு சிறை: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நடவடிக்கை

சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில்  நன்னடத்தை பிணை பத்திரத்தை மீறி மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 9 குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னையில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், சென்னை  காவல் ஆணையர் சங்கர் ஜிவால்  உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


மேலும், குற்ற  வழக்குகள் உள்ள நபர்கள், சம்பந்தப்பட்ட செயல்துறை நடுவர்களாகிய துணை ஆணையர்கள் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி, தான் திருந்தி வாழப்போவதாகவும், இனி ஒரு வருடத்திற்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும் நன்னடத்தை பிணை பத்திரங்கள் எழுதி கொடுத்து, மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் 4 குற்றவாளிகள், மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் 2 குற்றவாளிகள், புளியந்தோப்பு, புனித தோமையார்மலை மற்றும் திருவல்லிக்கேணி காவல் மாவட்டங்களில் தலா 1 குற்றவாளி என மொத்தம்      9 குற்றவாளிகள் கடந்த 4.3.2023 முதல் 10.3.2023 வரையிலான ஒரு வாரத்தில் செயல்துறை நடுவராகிய சம்பந்தப்பட்ட துணை ஆணையர்கள் உத்தரவின்பேரில், பிணை ஆவணத்தில் எழுதிக் கொடுத்த ஒரு வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து மீதமுள்ள நாட்கள் பிணையில் வரமுடியாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

* குண்டர் சட்டத்தில் 60 பேருக்கு சிறை கடந்த 1.1.2023 முதல் 10.3.2023 வரை  சென்னையில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த  குற்றங்களில் ஈடுபட்ட   32 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு,  வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 18 குற்றவாளிகள், கஞ்சா  மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 9 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில்  ஈடுபட்ட ஒரு குற்றவாளி என மொத்தம் 60 குற்றவாளிகள் சென்னை  காவல் ஆணையர்  சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது  செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.     



Tags : Shankar Jiwal , Jail for 9 criminals who committed crimes by saying that they are going to survive: Police Commissioner Shankar Jiwal action
× RELATED ஐதராபாத்தில் நடந்த பூப்பந்து...