×

பையனூர் திரைப்பட நகரத்தில் கலைஞருக்கு சிலை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு

சென்னை: பையனூர் திரைப்பட நகரத்தில், கலைஞருக்கு சிலை அமைக்கப்படும் இடத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன், திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி நேரில் ஆய்வு செய்தனர். சென்னை அருகே பையனூரில் கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, திரைப்பட தொழிலாளர் அமைப்பான பெப்சி உறுப்பினர்களுக்கான குடியிருப்பு, தயாரிப்பாளர்கள் குடியிருப்பு, இயக்குநர்களுக்கான குடியிருப்பு, நடன கலைஞர்கள் குடியிருப்பு, திரைப்பட ஸ்டுடியோ, டப்பிங் கூடம் ஆகியவை அமைக்க 100 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் இப்பணிகள் கிடப்பில் பேடப்பட்டன. இந்நிலையில், திமுக ஆட்சி மீண்டும் ஏற்பட்டதை அடுத்து, குடியிருப்பு பணிகளை மீண்டும் தொடங்கவும், திரைப்பட படப்பிடிப்புகளை நடத்தவும், திரைப்பட துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இதனால், திரைப்பட நகரத்தை உருவாக்கிய கலைஞருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இந்த வளாகத்தில் கலைஞரின் உருவச்சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். அப்போது, திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், துணை தலைவர் சத்யாசேகர், தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பையனூர் சேகர் உடனிருந்தனர்.


Tags : Minister ,Thamo Anparasan , Statue for Artist in Payanoor Film City: Minister Thamo Anparasan Survey
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்