மாநகராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து நகராட்சி துறை செயலாளர் ஆய்வு

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று நேரில் ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு 117 ஜிஎன் செட்டி  சாலையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள கழிவறையை நேரில் பார்வையிட்டு அதன் பராமரிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். பொதுமக்களின் நலன் கருதி அங்குள்ள திறந்தவெளி இடத்தில் கூடுதலாக குளியலறை வசதியை விரைந்து ஏற்படுத்திடவும், கழிவறையை சுத்தமாக பராமரித்திடவும் உரிய நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதை தொடர்ந்து, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு 113 கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் புதிதாக மேம்படுத்தப்பட்ட முழு உடல் பரிசோதனைக்கூடம் மற்றும் டயாலிசிஸ் மையத்தை பார்வையிட்டார். பின்னர், கோடம்பாக்கம் மண்டலம், வார்டு 141 கண்ணம்மா பேட்டையில் உள்ள நவீன எரிவாயு தகன மேடையை ஆய்வு செய்து, மயான பூமியை பசுமையாக பராமரிக்கும் வகையில் மரக்கன்றுகள் நடுதல், மரங்களுக்கு மஞ்சள், பச்சை நிறம் கொண்ட வர்ணம் பூசிடவும், நீரூற்றுகள் அமைக்கவும்,  நாய்களை புதைக்கும் இடத்தை சீரமைக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின்போது ஆயிரம்விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.  

Related Stories: