×

பூந்தமல்லியில் முதலாளியின் மகள் மஞ்சள் நீராட்டு விழாவில் சீர்வரிசையுடன் வந்து அசத்திய வடமாநில தொழிலாளர்கள்: குடும்ப உறுப்பினர்கள் போல் உற்சாக வரவேற்பு தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி பரவும் நிலையில் நெகிழ்ச்சி

சென்னை: தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தகவல் பரவிய நிலையில், தங்களது முதலாளியின் மகள் பூப்புனித நீராட்டு விழாவில்  குடும்ப உறுப்பினர்கள் போல சீர்வரிசையுடன் வடமாநில தொழிலாளர்கள் வந்து கலந்துகொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி (40), கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி பத்மாவதி. ராஜாமணியின் கட்டுமான நிறுவனத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்து பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை வேலையாட்கள் என நினைக்காமல் ராஜாமணி குடும்ப உறுப்பினர்களைப் போல பாவித்து வந்தார். இந்நிலையில், ராஜாமணியின் மகள் விஷ்ணுபிரியாவின் பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சி பூந்தமல்லி அருகே தனியார் மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் என பலருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அதேபோல, தன்னிடம் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களையும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் எனக் கூறி அவர்களுக்கும் ராஜாமணி அழைப்பு விடுத்திருந்தார்.


முதலாளியின் அழைப்பை ஏற்று, வடமாநில தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சிக்கு குடும்ப  உறவினர்கள் போல வந்து குவிந்தனர். சகோதரத்துவத்தை எடுத்துக் காட்டும் விதமாக பழங்கள், பூ, இனிப்பு மற்றும் பலகார வகைகள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களுடன் அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். அவர்களை ராஜாமணி அன்புடன் வரவேற்று உபசரித்தார். மேலும், உறவினர்களைப் போல சிறுமிக்கு நலங்கு வைத்து, மலர்தூவி வாழ்த்தினர். வட மாநில தொழிலாளர்களின் இந்த செயல், விழாவுக்கு வந்திருந்த உறவினர்களிடேயே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் வடமாநில தொழிலாளர்கள் அனைவருக்கும் முக்கியத்துவம் அளித்து அறுசுவை உணவு அளித்து மகிழ்வித்தனர். தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தகவல்கள் பரவிய நிலையில் இந்த பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சி வரவேற்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Poontamalli ,Yellow Water Festival ,North State ,Tamil Nadu , In Poontamalli, the boss's daughter arrives in a procession at the Yellow Water Festival. Unreal North State workers: enthusiastic reception like family members.
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்