ஜாதி சான்றிதழ் வழங்க மறுத்த ஆர்டிஓவுக்கு ரூ.10,000 அபராதம்

மதுரை: ஜாதி சான்றிதழ் வழங்க மறுத்த விவகாரத்தில் வருவாய் கோட்டாட்சியருக்கு (ஆர்டிஓ) ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம், திருவெரும்பூரைச் சேர்ந்த நித்யா, தனது மகன், மகளுக்கு காட்டுநாயக்கன் ஜாதி சான்றிதழ் கோரிய மனுவை நிராகரித்த ஆர்டிஓ உத்தரவை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், குழந்தைகளின் தந்தை காட்டு நாயக்கன் ஜாதி சான்றிதழ் பெற்றுள்ளார்.

மனுதாரர் (தாய்) பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர். இருவேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்தால், தந்தை அல்லது தாயின் ஜாதியை குறிப்பிட்டு குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் பெறலாம் என்று அரசின் அறிவிப்பாணைகள் தெளிவாக உள்ளன. எனவே, நிராகரித்த திருச்சி ஆர்டிஓவின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.  மனுவை பரிசீலித்து ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுவை நிராகரித்த ஆர்டிஓவுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை ஐகோர்ட் கிளை சட்டப்பணிகள் ஆணையத்திற்கு செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

Related Stories: