சென்னை: குடிபோதையில் மது பாட்டிலை சுவற்றில் அடித்து உடைத்தபோது கண்ணாடி துண்டு பட்டதால் ஏற்பட்ட முன்விரோதத்தால் இளைஞரை குத்தி கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் தீபா. இவரது மகன் அப்பு (எ) ஆகாஷ் (24). இவர் கடந்த 2014 ஏப்ரல் 27ம் தேதி மது அருந்திவிட்டு அந்த பாட்டிலை அருகில் இருந்த சுவற்றில் வீசியுள்ளார். பாட்டில் உடைந்து கண்ணாடி துண்டு அங்கு நின்றிருந்த சுகுமார் (24) என்பவர் மீது பட்டது. இதையடுத்து, இருவருக்கும் இடையை தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அன்று இரவு 11.30 மணியளவில் சுகுமார் தனது நண்பர்கள் குப்பன் (24), பழனிவேல் (23), ராஜா (22) ஆகியோருடன் அப்புவின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அப்புவிடம் தனியாக பேச வேண்டும் என்று அவரது தாயிடம் கேட்டுள்ளனர். எதுவாக இருந்தாலும் என் முன்பே பேசுங்கள் என்று அப்புவின் தாய் தெரிவித்துள்ளார். உடனே எதிர்பாராத விதமாக அப்புவை குப்பன், பழனிவேல், ராஜா ஆகியோர் பிடித்துக்கொள்ள சுகுமார் தன் கையில் வைத்திருந்த கத்தியால் அப்புவின் வயிற்றி பல இடங்களில் குத்தியுள்ளார். இதை பார்த்து அப்புவின் தாய் கதறவே அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். உடனடியாக அப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அப்பு உயிரிழந்தார்.
இதையடுத்து, அப்புவின் தாய் தீபா பழைய வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் சுகுமார், குப்பன், பழனிவேல், ராஜா ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி டி.வி.ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை காலத்தில் சுகுமார் மரணமடைந்ததால் மற்ற 3 பேரின் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.ரவிக்குமார் ஆஜராகி சாட்சிகளை விசாரித்து, சாட்சியங்களை தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, 3 பேர் மீதான குற்றச்சாட்டுகள் போதிய சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் குப்பன், பழனிவேல், ராஜா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
