நெசவுத்துறையில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்திட மாநிலம் முழுவதும் ஜவுளி பூங்கா: கோவையில் நடந்த விசைத்தறியாளர் கூட்டமைப்பின் பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கோவை: நெசவுத்துறையில் முன்னணி மாநிலமாக  தமிழ்நாடு தொடர்ந்து திகழ்ந்திட, மாநிலம் முழுவதும் பல இடங்களில் ஜவுளி பூங்காக்களை உருவாக்கிட இந்த அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம், ஒரே இடத்தில் ஜவுளி உற்பத்தி மேற்கொள்ள இயலும். அந்த வகையில் மேற்கு மண்டலத்தில் ஒரு ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என கோவையில் நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழ்நாட்டில் விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரத்தை 1,000 யூனிட்டாகவும், கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரத்தை 300 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நன்றி அறிவிப்பு, பாராட்டு விழா கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நேற்று மாலை நடந்தது.

இதில், விசைத்தறியாளர்களின் பாராட்டுகளை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுக தோன்றிய காலம் முதல் நெசவாளர்களுக்கு பாதுகாப்பாக இருந்து வருகிறோம். திமுக உருவாக்கப்பட்ட 1949-ம் ஆண்டு காலக்கட்டத்திலேயே நெசவாளர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். 1953- ம் ஆண்டு ஜனவரி 4ம்தேதி கைத்தறி ஆதரவு நாள்’ என்று கொண்டாடியது திமுக. நெசவாளர்களிடம் இருந்து துணியை பெற்று தோளிலே தூக்கிச்சென்று தெருத் தெருவாக விற்றுக்கொடுத்த இயக்கம்தான் திமுக. திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் நெசவாளர்களுக்கு உதவி  செய்து வருகிறது என்பதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். 1971-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு ஜரிகை நிறுவனம் நிறுவப்பட்டது. 1973ல் ஈரோட்டில் தமிழ்நாடு கைத்தறி கூட்டுறவு சங்கம் துவக்கப்பட்டது.

நெசவாளர் முதியோர் ஓய்வூதிய திட்டம் முதன் முதலாக 1997-ம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது. 26,434 நெசவாளர்கள் இதனை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இப்படி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது இந்த அரசு. கடந்த 10 ஆண்டு காலமாக செயல்படாமல் இருந்த காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கைத்தறிப்பட்டு பூங்கா தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. தஞ்சாவூர், கரூர், விருதுநகர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள சுமார் 10,000 கைத்தறி நெசவாளர் பயனடைக்கூடிய வகையில் நெசவுக்கூடம் பொது வசதி மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வந்த 46 தற்காலிக பணியாளர்கள், பணி நிரந்தரம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். சென்னையில் முதல் முறையாக ரூ. 30 கோடி மதிப்பில் உலகத்தரத்தில் டிசைன் அண்ட் இன்குபேஷன் சென்டர் அமைக்க திட்ட அறிக்கை தயார்  செய்யப்பட்டு வருகிறது.

உற்பத்தி மற்றும் தரத்தினை மேம்படுத்த ரூ.12 கோடி செலவில் எலக்ட்ரானிக் பேனல் போர்டு நிறுவப்பட்டு வருகிறது. 50,000 கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு  வழங்கப்பட்டுள்ளது. இப்படி நிறைவேற்றப்பட்டு இருக்கக்கூடிய திட்டங்கள் போதாது என மின்சாரத்துறை அமைச்சர், தனது பங்குக்கு நெசவாளருக்கு திட்டங்களை தீட்டி இருக்கிறார். எப்போதும்  டார்கெட் நிர்ணயித்து, திட்டமிட்டு செயல்படக்கூடியவர் நம்முடைய அமைச்சர் செந்தில் பாலாஜி. அதை நிறைவேற்றி காட்டுவதில் அவர் வல்லவர்.

தமிழ்நாட்டை ஒரு கட்சி 10 ஆண்டுகள் ஆண்டது. அந்த 10 ஆண்டு காலத்தில் மொத்தமே 2,20,000  வேளாண் மின் இணைப்புகள்தான் வழங்கப்பட்டது ஆனால், நாம் 20 மாத காலத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இலவச மின் இணைப்புகளை வழங்கி இருக்கிறோம். சொன்னதை  செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது கலைஞருடைய முழக்கம். சொல்லாததையும் செய்வோம் என்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் முழக்கம். அந்த வகையில்தான் கைத்தறிக்கும்,  விசைத்தறிக்கும் மின் கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள 24.06 லட்சம் விசைத்தறிகளில், நமது மாநிலத்தில் மட்டும் 5.63 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. இத்துறையில் 10 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவரையும் காக்கும் கடமை இந்த அரசுக்கு உண்டு. இங்கு, என்னிடம் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளீர்கள். இவை அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என உறுதி கூறுகிறேன். நெசவுத்துறையில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து திகழ்ந்திட, மாநிலம் முழுவதும் பல இடங்களில் ஜவுளி பூங்காக்களை உருவாக்கிட இந்த அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம், ஒரே இடத்தில் ஜவுளி உற்பத்தி மேற்கொள்ள இயலும். அந்த வகையில் மேற்கு மண்டலத்தில் ஒரு ஜவுளி பூங்கா அமைக்கப்படும். இது, எனது அரசு அல்ல, நமது அரசு, ஏன் உங்களின் அரசு.

மேற்கு மண்டலம், சிலரது கோட்டை என்றார்கள். உண்மையில் நாமும் வெற்றி பெற முடியாத நிலை இருந்தது. ஆனால், இன்று நிலைமை மாறி விட்டது. அதைத்தான் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவு நமக்கு உணர்த்தியுள்ளது. அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டு காலத்தில் மேற்கு மண்டலத்திற்கு என்ன சாதனை செய்தார்கள். எதுவுமே கிடையாது. வீழ்ந்து கிடந்த பெரிய தொழில்கள் மட்டுமல்ல, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலை தூக்கி நிறுத்தியுள்ளோம். தொழில் வளர்ச்சியில் சிறந்த மாநிலமாக, அமைதியான மாநிலமாக, அனைவருக்கும் வாழ்வு தரும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இது, சிலருடைய கண்களுக்கு பொறுக்கவில்லை.

இன்று நீங்கள் எனக்கு அளித்துள்ள இந்த பாராட்டு என்பது இத்தோடு இவனது கடமை முடிந்துவிட்டது என்பதற்காக அல்ல. இன்னும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காக. அப்படித்தான் நானும் கருதுகிறேன். பாராட்டு விழா நடத்திய சங்கங்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். விழாவில், அமைச்சர்கள் முத்துசாமி,  காந்தி, கயல்விழி செல்வராஜ், பொள்ளாச்சி தொகுதி எம்.பி. சண்முகசுந்தரம், எம்எல்ஏக்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், ஈஸ்வரன், மின்சாரத்துறை கூடுதல் தலைமை செயலர் ராஜேஷ் லக்கானி, தர்மேந்திர பிரதாப் யாதவ், கோவை மாவட்ட கலெக்டர்  கிராந்திகுமார் பாடி உள்பட பலர் பங்கேற்றனர். தொழில் வளர்ச்சியில் சிறந்த  மாநிலமாக, அமைதியான மாநிலமாக, அனைவருக்கும் வாழ்வு தரும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இது, சிலருடைய கண்களுக்கு  பொறுக்கவில்லை.

* சலசலப்புக்கு அஞ்சமாட்டேன்

மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழக்கூடிய மாநிலம்தான் நம்முடைய தமிழ்நாடு. உழவர்களுக்கு, நெசவாளர்களுக்கு, இளைஞர்களுக்கு, மாணவர்களுக்கு, பெண்களுக்கு, விளிம்பு நிலை மக்களுக்கு, ஏழை-எளிய மக்களுக்கு இந்த ஆட்சி தினந்தோறும் செய்துதரக்கூடிய நலத்திட்ட உதவிகளில் இருந்து, மக்களை திசை திருப்ப சிலர் பொய்களையும், வதந்திகளையும் பரப்புகிறார்கள். இதுபோன்ற எத்தனையோ பூச்சாண்டிகளை பார்த்தவன் நான். ஏனெனில், நான் கலைஞருடைய மகன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான், சலசலப்புக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன். போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும். தொடர்ந்து மக்கள் சேவை ஆற்றுவேன்.

* முதல்வர் பாடிய பாடல்

நம்முடைய தலைவர் கலைஞர் கதை, வசனம் எழுதிய ‘புதையல்’ என்ற திரைப்படத்தில், நெசவுத்தொழிலை பாராட்டி, ‘’சின்ன சின்ன இழை..., பின்னி பின்னி வரும்..., சித்திரை ைகத்தறி சேலையடி... நம்ம தென்னாட்டில் எந்நாளும் கொண்டாடும் வேலையடி...’’ என்ற பாடல் வரும். இதனை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இந்த பாடலை எழுதுவதற்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் காஞ்சிபுரத்தில் ஒரு வாரம் தங்கியிருந்து, நெசவாளர்கள் படும் கஷ்டத்தை நேரில் பார்த்து, உணர்ந்து எழுதினார். இது வரலாறு. மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழக்கூடிய மாநிலம்தான் நம்முடைய தமிழ்நாடு என்பதை இந்த பாடல் வரிகள் உணர்த்தின. இப்படி பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்த பாடலையும் பாடி காண்பித்தார்.

Related Stories: