துணை முதல்வர் கைதானது போன்று கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார்!: கோர்ட்டில் ஆஜரான கைதி பேட்டி

புதுடெல்லி: டெல்லி துணை முதல்வர் கைது செய்யப்பட்டது போன்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என்று கைதி சுகேஷ் சந்திரசேகர் கூறினார்.  ரூ.200 கோடி பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர், தற்போது டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இவர், டெல்லி அமைச்சர்கள், சிறைத்துறை அதிகாரிகள், சினிமா நடிகைகள் உள்ளிட்ட பலருக்கு பல கோடி ரூபாய் கொடுத்ததாக அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

தொடர்ந்து டெல்லி ஆம்ஆத்மி தலைவர்கள், அமைச்சர்கள் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இவ்விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தவும் கோரினார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மைக்கு புறம்பானவை என அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம்ஆத்மி தலைவர்கள் கூறினர். கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். இதற்கிடையே சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி வழக்கில் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் நேற்று ஆஜரானார். அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதின் மூலம் உண்மை வென்றது. விரைவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார்’ என்று கூறினார்.

Related Stories: