×

சென்னை இன்ஸ்பெக்டர் சாவில் மர்மம்: பொள்ளாச்சி போலீசார் தீவிர விசாரணை

பொள்ளாச்சி: சென்னை அயனாவரம்  போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார் சபரிநாத் (40). இவர், கோவை மாவட்டம் பொள்ளாச்சி நல்லூரில் உள்ள தனது வீட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த தீ விபத்தில்,  அவரது வீட்டில்  வாடகைக்கு குடியிருந்து வந்த  சாந்தி(37) என்பவருடன்  உடல் கருகி உயிர் இழந்தார்.

மேலும் உயிரிழந்த இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக , போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர்.

தடயவியல் நிபுணர்கள் விபத்து நடந்த பகுதிகளில் இருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில், தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் பெட்ரோல்  பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று சபரிநாத் மற்றும் சாந்தி ஆகிய இருவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இருவரும் தீ காயங்களால் உயிரிழந்ததாக  முதற்கட்ட மருத்துவ அறிக்கை வெளியாகி உள்ளது. இருப்பினும், இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர்  தொடர்ந்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

இன்ஸ்பெக்டர் சபரிநாத்தின் மனைவி,  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இவரின் மருத்துவ செலவுக்காகவும் தனிப்பட்ட தேவைகளுக்காகவும் சபரிநாத்,  சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. மனைவி இறந்ததற்கு  பின்பு, தனது வீட்டில் ஒரு பகுதியில் குடியிருந்து வந்த சாந்தி, சபரிநாத் வீட்டுக்கு வரும் போது சமையல் செய்வதற்காக வந்து சென்றுள்ளார்  என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
  கடன் பிரச்னையில் இருந்த சபரிநாத் ஒருவேளை தற்கொலை முயற்சிக்காக, பெட்ரோலை பயன்படுத்தி தீ வைத்துக் கொண்டிருக்கலாம் எனவும், அந்நேரத்தில் சாந்தி அங்கு வந்து காப்பாற்ற முயன்றபோது அவரும் சேர்ந்து இறந்திருக்கலாம் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் கடன் தொல்லையால் இவர் தற்கொலை செய்து கொண்டாரா,  வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்று தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக கருதப்படும் தடயவியல் நிபுணர்களின் அறிக்கை, தீயணைப்பு துறை அறிக்கை, பிரேதப் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகள் கிடைக்கப்பெற்ற உடன் இந்த விபத்துக்கான காரணம் குறித்து முழுமையாக தெரியவரும் என போலீஸ் தரப்பில்  கூறப்படுகிறது.
 
அரசு மரியாதையுடன் உடல் தகனம்: நேற்று சபரிநாத்தின் உடல் பரிசோதனை செய்த பின் நல்லூரில் உள்ள  வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டது. உறவினர்கள்  அஞ்சலி செலுத்திய பிறகு, உடுமலை ரோட்டில் உள்ள மின் மயானத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு துப்பாக்கி குண்டு முழங்க அரசு மரியாதையுடன், தகனம் செய்யப்பட்டது.

Tags : Chennai ,Pollachi , Mystery in Chennai inspector's death: Pollachi police intensive investigation
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...