அதிமுகவை எடப்பாடி பழனிசாமி சாதி கட்சியாக மாற்றிவிட்டார்: ஓ.பி.எஸ். தரப்பு ஆதரவாளர் மருது அழகுராஜ் குற்றச்சாட்டு

சிவகங்கை: அதிமுகவை பழனிசாமி சாதி கட்சியாக மாற்றிவிட்டதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் குற்றச்சாட்டியுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிவகங்கையில் இன்று மாலை நடைபெற உள்ளது. இதில் அதிமுகவின் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஓ.பி.எஸ். தரப்பை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் முழக்கம் எழுப்பியும், கருப்பு நிற பலூன்களை பறக்க விட்டும் அவர்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பு எழும் என்று அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணி கழக கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் சிவகங்கையில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல பொதுமக்களே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உள்ளனர். பழனிசாமிக்கு மக்கள் மத்தியில் உள்ள எதிர்ப்புதான் மதுரை விமான நிலையத்தில் இளைஞர் ஒருவர் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஷ்வரன் என்று இளைஞர், பழனிசாமியை பார்த்ததும் துரோகத்தின் அடையாளம் என அவருக்கு எதிராக முழக்கமிட்டுள்ளார். இதேபோன்று தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எதிர்ப்பு வரும். எடப்பாடி பழனிசாமி முகத்தை பார்த்தாலே துரோகத்தை நினைத்து கோபம் வருவதாக அவர் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி நடத்தும் கூட்டங்களுக்கு பணம் கொடுத்து ஆட்களை சேர்ப்பதாக ஓ.பி.எஸ். அணி விமர்சனம் செய்துள்ளனர்.

Related Stories: