×

இடத்தை காலி செய்தது யானைக்கூட்டம் பேரிஜம் ஏரிக்குச் செல்ல ‘க்ரீன் சிக்னல்: கொடைக்கானல் வரும் சுற்றுலாப்பயணிகள் குஷி

கொடைக்கானல்: குட்டிகளுடன் முகாமிட்டிருந்த யானைக்கூட்டம் வேறு பகுதிக்கு சென்றதால் கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரி பகுதியை சுற்றி பார்க்க சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவர். இந்த பகுதிக்கு செல்ல வனத்துறையின் சிறப்பு அனுமதி பெற வேண்டும். இதேபோல மோயர் பாயின்ட், தொப்பி தூக்கும் பாறை, அமைதி பள்ளத்தாக்கு ஆகியவை முக்கிய சுற்றுலா இடங்களாக உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை பேரிஜம் ஏரிப்பகுதியில் காட்டுயானைகள் நடமாடுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பேரிஜம் ஏரி பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், யானைக்கூட்டம் அங்கிருந்து நேற்று வேறு பகுதிக்கு சென்றதால் பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘‘யானைக்கூட்டம் குட்டிகளுடன் பேரிஜம் வனப்பகுதிக்குள் நுழைந்தது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக அப்பகுதிக்கு செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டது. தற்போது பேரிஜம் வனப்பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள், அப்பகுதியை விட்டு சென்று விட்டன. இதனால் பேரிஜம் பகுதியை சுற்றுலாப் பயணிகள் காண்பதற்கு வனத்துறை இன்று (நேற்று) முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது’’ என்றார். பேரிஜம் ஏரிக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Yanakutam Parijam Lake ,Kodaikanal , vacated space Yanakutam gives 'green signal' to go to Parijam lake: Tourists coming to Kodaikanal Khushi
× RELATED ஊட்டி- கொடைக்கானலுக்கு இ-பாஸ் நடைமுறை தொடரும்: கலெக்டர்கள் அறிவிப்பு