2 குட்டிகளுடன் சாலையில் சுற்றித்திரியும் பெண் யானை: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

அந்தியூர்:  ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் வனசோதனை சாவடி பகுதியில் அந்தியூர் - பர்கூர் பிரதான சாலையில் பெண் காட்டு யானை ஒன்று இரண்டு குட்டிகளுடன் சுற்றித்திரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை காட்டு யானைகள் சாலையில் சுற்றித்திரிந்ததன் காரணமாக வன சோதனைச் சாவடியிலேயே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. தொடர்ந்து யானை வனப்பகுதிக்குள் சென்ற பிறகு வாகனங்கள் சாலையில் செல்ல அனுமதிக்கப்பட்டன. இதன்காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இது குறித்து அந்தியூர் வனத்துறையினர் கூறுகையில்,``கடந்த இரண்டு தினங்களாக ஒரு பெண் யானை இரண்டு குட்டிகளுடன் அவ்வப்போது பிரதான சாலைக்கு வந்து சுற்றி திரிகிறது.

ஒவ்வொரு முறையும் 30 நிமிடங்களுக்கு மேல் சாலையிலேயே சுற்றித்திரிந்து அங்குள்ள மூங்கில்களை சாப்பிட்டு வருகிறது. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளோம்.மேலும், சாலையில் யானை இருக்கும்போது அதனை யாரும் எந்த தொந்தரவும் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளோம்.  தற்போது வறட்சியான காலம் என்பதால் அந்தியூர்-பர்கூர் மலைப்பாதை சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்’’ என்றனர்.

Related Stories: