×

முத்துப்பேட்டை அடுத்த மேலநம்மங்குறிச்சி அரசு பள்ளியில் மாணவர்கள் உருவாக்கிய தோட்டத்தில் விளைந்த காய்கறிகள்: சமைத்து உணவு பரிமாறப்பட்டது

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கும் சத்துணவுகளில் காய்கறிகளில் ரசாயனம் இல்லாத இயற்கையான சத்தான உணவுகளை அதிகளவில் வழங்கும் விதமாக காய்கறி தோட்டம் அமைக்க கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதில் ஆரம்பத்தில் இப்பகுதியில் அனைத்து பள்ளிகளில் தோட்டம் அமைத்து பராமரித்து அந்த காய்கறிகளை மாணவர்களுக்கு சத்துணவுடன் சமைத்து வழங்கப்பட்டது அதன்பின்னர் படிப்படியாக குறைந்துவிட்டது. பின்னர் இப்பகுதியில் கஜா புயல் பாதிப்பு ஏற்பட்ட பிறகு பெரும்பாலான பள்ளிகளில் தோட்டம் சேதமாகிவிட்டது. இதையடுத்து அரசு பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளது.

இந்நிலையில் முத்துப்பேட்டை அடுத்த மேலநம்மங்குறிச்சி அரசு பள்ளியில் அங்குள்ள தலைமையாசிரியர் மகாதேவன் உதவியுடன் முன்னுதாரணமாக மாணவர்களே சமீபத்தில் பள்ளி வளாகத்தில் காய்கறி தோட்டம் உருவாக்கினர். இதில் பல்வேறு காய்கறி செடிகள் நன்கு வளர்ந்து செழித்து வரும் நிலையில் நேற்று தோட்டத்தில் முதன் முதலில் விளைந்து இருந்த முள்ளங்கி மற்றும் பயத்தங்காய் காய்கறிகளை பறித்து அங்குள்ள சத்துணவு பணியாளர்களிடம் சமைப்பதற்கு வழங்கினர். பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் முள்ளங்கி பயத்தங்காய் போட்டப்பட்ட கலவை சாதம் சமைத்து பரிமாறப்பட்டது மாணவர்களும் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தனர். காய்கறி தோட்டம் அமைத்து நேற்று காய்கறிகளையும் அறுவடை செய்த மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர். இதுகுறித்து தலைமையாசிரியர் மகாதேவன் கூறுகையில்:

எங்கள் பள்ளி தோட்டத்தில் விளைந்த முள்ளங்கி பயத்தங்காயை மாணவர்கள் சத்துணவு அமைப்பாளர் மற்றும் பணியாளர்களிடம் வழங்கினர். சத்துணவில் சாம்பார் சாதம் தயார் செய்து வழங்கப்பட்டது. சத்துணவு ருசியாக இருந்ததால் மீண்டும் மீண்டும் வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தனர். இது போல் தினமும் சாம்பார் சாதம் போடுங்கள் சார் என்று கூறினார்கள். மாணவர்கள் அனைவருக்கும் இரண்டு விதைகள் வழங்கப்பட்டது. விதைகளை தங்கள் வீட்டுத் தோட்டத்தில் பயிரிட்டு வளர்த்து காய் காய்த்த பின் நான்கு விதைகள் கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்று கூறியவுடன் மாணவர்கள் அனைவரும் கொண்டு வந்து தருகிறோம் என்று மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்கள். நாம் பள்ளியில் தோட்டம் உருவாக்கியது போன்று மாணவர்களாகிய நீங்கள் வீட்டுத் தோட்டம் அமைத்து தங்கள் வீட்டுக்குத் தேவையான காய்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தோட்டம் அமைக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது என்றார்.


Tags : Melanammangurichi Government School ,Muthuppet , Muthuppet, Govt. School, students, in the garden created, vegetables grown
× RELATED கந்தப்பரிச்சான் ஆறு குறுக்கே ₹4.95 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்