×

போக்குவரத்து நெரிசலை குறைக்க பழநி நகரில் பஸ்களின் வழித்தடம் மாற்றப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பழநி: பழநி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பஸ்களின் வழித்தடங்களை மாற்றி அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி. இந்நகருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் சராசரியாக 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழா காலங்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதன் காரணமாக பழநி நகருக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. பழநி நகரில் இருந்து அதன் சுற்றுப்புறங்களில் உள்ள 80க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும், சுற்றுலா வாகனங்களும் பழநி நகருக்கு அதிகளவில் வருகின்றன.

இதனால் பழநி நகரம் எப்போதும் போக்குவரத்து நெரிசலுடனேயே காணப்படுகின்றன. இதில் கோவை மற்றும் திருப்பூர் வழித்தடங்களை இணைக்கும் ரெணகாளியம்மன் நால்ரோடு பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசலுடனேயே காணப்படுகிறது. எனவே, பழநி நகருக்கு வரும் பஸ்களின் வழித்தடங்களை மாற்றியமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பழநியை சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கர் கூறியதாவது: பழநி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முதற்கட்டமாக கோவை வழித்தடத்தில் இருந்து வரும் கனரக வாகனங்களின் வழித்தடங்களை மாற்ற வேண்டும். இதன்படி உடுமலை, பொள்ளாச்சி, கோவை போன்ற வெளியூர் செல்லும் பஸ்களும், நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி, கொழுமம் போன்ற சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்லும் பஸ்களும் பஸ் நிலையத்தில் இருந்து கிளம்பி வழக்கம்போல் புதுதாராபுரம் சாலை, ரெணகாளியம்மன் கோயில், சாமி தியேட்டர் வழியாக காரமடையை அடைந்து செல்ல வேண்டும்.

பழநி நகருக்குள் நுழையும் போது, காரமடையில் இருந்து, ஓம் சண்முகா தியேட்டர் இட்டேரி சாலை வழியாக புதுதாராபுரம் சாலையை அடைந்து பஸ் நிலையத்திற்கு செல்லும் வகையில் வழித்தடம் மாற்றி அமைக்க வேண்டும். இதனால் ரெணகாளிம்மன் கோயில் நால்ரோடு சந்திப்பு, சாமிதியேட்டர் ரோடு சந்திப்புகளில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். இந்த வழித்தடம் சில ஆண்டுகளுக்கு முன்பே மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் பழைய முறைக்கே மாற்றப்பட்டு விட்டது. எனவே போலீசார் போக்குவரத்து மாற்றத்தினால் ஏற்படும் நன்மையை உணர்ந்து மீண்டும் ஒருவழிப்பாதை முறையை அமல்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Palani , Will bus routes be changed in Palani Nagar to reduce traffic congestion?: Public expectations
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்