சாலையோரம் கேட்பாரற்று கிடந்த செல்போன், பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த போக்குவரத்து எஸ்ஐ: அதிகாரிகள் பாராட்டு

திருவொற்றியூர்: சாலையோரம் கேட்பாரற்று கிடந்த 2 செல்போன்கள், ரூ.3500 பணம் ஆகியவற்றை உரியவரிடம் ஒப்படைத்த போக்குவரத்து எஸ்ஐக்கு, அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். ராயபுரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மணிவண்ணன். இவர், நேற்று பணி நிமித்தமாக, திருவொற்றியூர் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு, பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திருவொற்றியூர் நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே சென்ற போது, சாலையோரம் ஒரு கைப்பை கிடந்தது. உடனே வண்டியை நிறுத்தி, அந்த பையை பார்த்தபோது, அதில் 2 செல்போன்கள் மற்றும் ரூ.3500 பணம் ஆகியவை இருந்தது.

இந்த கைப்பையை எடுத்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் மணிவண்ணன், திருவொற்றியூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளரிடம் ஒப்படைத்து, உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, போலீசார் கைப்பையை சோதனையிட்டபோது, அதில் திருவொற்றியூர் பூங்காவனம்புரம் பகுதியை சேர்ந்த தரணி அகிலன் என்பவரின் மனைவி எப்சிக்கு, சொந்தமான பொருள் என்று தெரியவந்தது. போலீசார் போன் மூலம் அவருக்கு தகவல் தெரிவித்து, அவரை காவல் நிலையம் வரவழைத்து, தவறவிட்ட பொருளை அவரிடமே திருப்பி கொடுத்தனர். கீழே கடந்த செல்போன் மற்றும் பணத்தை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் மணிவண்ணனை, காவல் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Related Stories: