×

பொதுமக்களுக்கு இடையூறாக ஜெயலலிதா பிறந்தநாள் விழா அதிமுக மாவட்ட செயலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை:  அதிமுக பொதுச்செயலாளர் மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 5ம் தேதி சென்னை ஆர்.கே.நகரில் அதிமுக சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது, போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக நூற்றுக்கணக்கான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்த அவதூறான கருத்துகளை பரப்புவதற்காக உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல்  எல்.இ.டி. திரை வைத்து ஒளிபரப்பியதாகவும் திமுக வட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் ஆர்.எஸ்.ராஜேஷ் உள்ளிட்ட 21 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அதிமுக சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், தெற்கு மண்டல செயலாளர் எம்.என்.சீனிவாச பாலாஜி, வட்ட செயலாளர் எஸ்.ஆர்.அன்பு ஆகியோர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் தரப்பில் இது தவறான குற்றச்சாட்டு எனவும் தெரிவிக்கப்பட்டது.  புகார்தாரரான தமிழ்செல்வன் தரப்பில், உரிய அனுமதி பெறாமலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யாமல் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டதால் முன்ஜாமீன்  வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
 
காவல்துறை தரப்பில் ஆஜரான மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, 21 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் தலைமறைவாக உள்ளதால், கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறி பொதுக்கூட்டம் நடந்த அன்று காவல்துறை தரப்பில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளின் குறுந்தகடாக தாக்கல் செய்தார்.
அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு, குறுந்தகட்டை ஆய்வு செய்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நெருப்பை கக்கும் கலைநிகழ்ச்சி நடத்தியது, மக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்கள் வைத்தது ஆகியவை நிரூபணம் ஆகியுள்ளது. இவை உயர் நீதிமன்றம் விதித்த  நிபந்தனைகளுக்கு முரணானது என்பதால் மூவரின் முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று  உத்தரவிட்டார்.

Tags : AIADMK ,district secretary ,Jayalalithaa , AIADMK district secretary's anticipatory bail plea dismissed for Jayalalithaa's birthday party as a public nuisance
× RELATED விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும்...