×

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் இரட்டிப்பாக பணம் தருவதாக மோசடி : கம்பெனி மேலாளர் கைது

சென்னை: புதுச்சேரி, சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நிறுவனம் நடத்தி முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் மற்றும் நிலம் தருவதாக கூறி ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி, மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாட்டில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில்  எல்பின் (ELFIN) நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும், நிலம் தருவோம், அதிக லாபம் தருவோம் என பொதுமக்களிடம் கூறி பணம் பெற்றுக் கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றி வந்த 7 நிறுவனம் மற்றும் அறம் மக்கள் நல சங்கம் டிரஸ்ட் அறம் டிவி சேனல் தமிழ்நாடு ராஜ்ஜியம் பத்திரிகை  ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், பெரம்பலூர், கோவை, சென்னை ஆகிய 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் வழிக்காட்டுதலின் பேரில் காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தப்படாத, முறைப்படுத்தப்படாத வைப்பு திட்டங்கள் மூலமாக பொதுமக்களை ஏமாற்றி வந்தனர். இந்த வழக்குகளில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த முக்கிய நபரான மேலாளர் அனந்த பத்மநாபனை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து பொதுமக்களின் முதலீடு பணத்தில் வாங்கிய கார் கைப்பற்றப்பட்டு தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பொதுமக்கள் இதுபோன்ற நிறுவனங்கள் மீது வைப்புநிதி திட்டங்களில் முதலீடு செய்யும் போது உண்மை தன்மை மற்றும் நம்பகத்தன்மை அறிந்து செயல்பட வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : Chennai , Fraud of giving double money in 6 districts including Chennai: Company manager arrested
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த நபர் கைது!